Wednesday, January 6, 2016

இல்லறமே நல்லறம்



அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கைவள்ளுவர் கூறியது. இல்லறம் அல்லது நல்லறம் அன்று.என்பது தமிழ் கூற்றுஅறம் என்றால் என்ன? அறத்துப்பாலில் இல்லற இயலைத்தான் முதலில் குறிப்பிடுகிறார் அறம் என்பது பொது நல நோக்கம் . தன்னல நோக்கம் அல்லாததுதிருவள்ளுவர் அறம் என்று பலவற்றை சுட்டிகாட்டுகிறார் அதில் இல்வாழ்க்கையும் ஒரு அறம் என்கிறார்.. அப்படியெனில் இல்வாழ்க்கை என்பதும் பொதுநலம் சார்ந்த ஒரு முறைமை என்பது புலப்படும். நாம் எதையும் பொதுநலத்தின் அடிப்படையில் சமுதாய கண்ணோட்டதில் சிந்திப்பதும் செயல்படுவதும் வேண்டும்.

திருக்குறள் இல்லறவியலில் அதிகாரங்களின் தலைப்புகள் என்னென்ன?. இல்வாழ்க்கை, வாழ்க்கைத்துணை, மக்கட்பேறு, அன்புடைமை, விருந்தோம்பல், இனியவைகூறல், செய்நன்றிஅறிதல், நடுவு நிலைமை, அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பிறனில் விழையாமை, பொறையுடைமை, அழுக்காராமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினை அச்சம், ஒப்புரவுஅறிதல், ஈகை, புகழ் என்று இருபது தலைப்புகள். இவற்றின் 200 குறள்களும் தனிமனிதருக்கு சொல்வதே ஆனாலும் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைமைகளின் நோக்கம் பொதுநலனை உத்தேசித்தே என்பதை அறியலாம்.

இவற்றில் மக்கட்பேறும் கூட தனிப்பட்ட நலனை சார்ந்தது மட்டுமே அல்ல. பிள்ளைப் பெறுதலும்கூட பெற்றவர்களுக்காக அல்ல மற்றவர்களுக்காக பொது நலனுக்காக இருக்கவேண்டும் அப்படி அவர்களை வளர்க்க வேண்டும்  என்று வள்ளுவர் மக்கட்பேறு அதிகாரத்தில் மிக நுட்பமாக சொல்லி இருக்கிறார். குழந்தைகளின் சிறுகை அளாவிய கூழை அமிழ்தென உண்டு (குறள்64) மகிழ்வதும் அவர்தம் மெய்தீண்டி உடற்கின்பமும்(குறள்65) குழலினும் யாழினும் இனிதான (குறள்66)  சொற்கேட்டு செவிக்கின்பமும் (குறள்65) பெறுவதோடு சரி தனிப்பட்ட பயன்.


ஆனால் மன்னுயிர்க்கெல்லாம் இனிது செய்யும் அறிவுடையனாகவும் (குறள்68), சான்றோன் எனப்புகழப் பெறுவனாகவும் (குறள்69), பழிப்பிறங்கா பண்பாளனாகவும் (குறள்62), அவையத்து முந்தி இருப்பவனாகவும் (குறள்67)  விளங்கச் செய்வதுதான்  தாய் தந்தையரின் நோன்பாக (முயற்சி) இருக்கவேண்டுமெனவும் (குறள்70) அப்படி அவர்களை வளர்க்க வேண்டும் எனவும் மொழிகிறார். அதுவே அம்மக்களை ஈன்ற பொழுதினும் பெரு மகிழ்ச்சி ஒரு தாய்க்கு (குறள்69) அளிக்கும் என்கிறார். அப்படிப்பட்ட அறிவறிந்த மக்களைப் பெறுவதும் அவர் பொதுநலம் கொண்டுழைப்பதும் சேவை மனப்பான்மை உடையோராக இருப்பதும்தான் பெற்றோரின் பெரும்பேறுபிள்ளைப் பெறுதலைப் பற்றிய கருத்தே இதுவெனில் மற்ற தலைப்புகளின் பொருளும் நோக்கமும் சொல்லிப் புரியவைக்க வேண்டியதில்லை. அவையாவும் இல்லறத்தாருக்கு பொதுநலனை கருத்தில் கொண்டே சொன்னவை என்பது தெளிவாகும்.

No comments: