Monday, December 21, 2015

பெண்ணியம்: ஆண் பார்வை

பெண்ணியம் பற்றி எப்போதையும் விட கூடுதலாக பேசுகிறோம். இதற்கான காரணம் என்ன? பன்னெடுங் காலமாக பழகிப் போயிருந்த சில வழக்கங்கள் குறிப்பாக தந்தைவழித் தலைமை கொண்ட குடும்பமுறை அதன் நீட்சியாக ஆண்வழி ஆளுமை கொண்ட சமூகம் உருவாகி ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை பார்க்க வேண்டி இருக்கிறது. அவை பெரும்பாலும் பெண்களுக்கு எதிரானதாகவும் அவர்களை சகமனிதராகவும் உயிரினமாகவோ கூட கருதாத ஒரு நிலை உருவாகி இருப்பது தெரிகிறது.

பெண்கள் ஆண்களைவிட மட்டமானவர்கள் ஆண்களுக்கு அடிமை சேவகம் செய்வதே பெண்கள் கடமை என்பதான கருத்தும் பரவி இருக்கிறது. பெண்களிடமும் இந்த கருத்துக்கு மதிப்பு இருப்பதையும் காண முடிகிறது. இதற்கான காரணங்கள் என்ன? குழந்தை பெரும் தகுதி உடைய பெண்ணை முன்னிறுத்தி தாய்த்தலைமை குடும்ப முறைதான் முதலில் இருந்ததாக மானுடவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். பிறகு எப்படி ஆண்வழிச் சமூகம் ஏற்பட்டது? அது எப்படி பெண்ணடிமை முறைக்கு வழிகோலியது என்றெல்லாம் இப்போது பெண்கள் சிந்திக்கத் துவங்கிவிட்டார்கள்.

பெண்கள் மீதான பாரபட்சத் தன்மைக்கு பொருளாதாரம், அரசியல், சமயம், கலாச்சாரம் ஆகிய துறைகளில் பெண்கள் ஓரங்கட்டப் பட்டிருப்பது கண்கூடு.  சமீபகாலத்தில் தற்போதய சூழலில் பெண்களுக்கும் சிறுமியருக்கும் இழைக்கப்படும் கொடுமைகள் வன்முறைகள் எல்லாம் சமூகப் பிரச்சனைகளாக்கப்பட்டு வருகின்றன. இதனை பெண்கள் அமைப்புகளும் பெண்களில் சிலரும் சில ஆண்களும் கூட இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். விவாதங்கள் உருவாக்கப் படுகின்றன.

சமூகத்திற்கும் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஆட்சியாளருக்கும் அரசு அதிகாரத்தினருக்கும் இவை எட்டுகின்றன. பெண்களின் சமூக பிரச்சினைகளையும் அதன் அடிநாதமாக விளங்கும் பாலினம் பற்றிய புரிதலுக்கும் இத்தகைய விவாதங்களும் விளக்கங்களும் வழிவகுக்கின்றன.

மேலும் வேலைக்கு போகும் பெண்கள் நடுத்தர குடும்பத்து பெண்கள் இடையிலும் கூட பெண்ணிய சிந்தனைகள் பரவி வருகிறது. ஆண்வழி சமூகத்தின் அத்துமீறிய நடைவடிக்கைகளை எதிர்த்து கேள்வி கேட்கும் நிலமை உருவாகி உள்ளது. இத்தகைய மாற்றங்கள் பெண்களிடம் உருவாகி பெண்கள் பல துறைகளிலும் முன்பைவிட முதன்மை நிலைக்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.

பெண்களிடம் இத்தகைய மாற்றம் உருவாகிவரும் தருணத்தில் ஆண்களிடம் ஏற்பட்ட  நல்ல மாற்றம் என்ன? பெரிதாக எதுவுமே இல்லை என்று சொல்லலாம். அதே நேரம் பெண்களிடை உருவாகும் மாற்றங்களை எதிர்க்கின்றனர். அதை சிலர் வன்முறையுடன் செய்கின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டியது. ஆண் பெண் சமத்துவம் உருவாகுவது நல்லது என்பதை ஆண்கள் உணர வேண்டும்.  அதற்கு இருவரிடையிலும் மாற்றம் வர வேண்டும். ஆண்களின் பங்கு இதில் கூடுதலாக இருக்க வேண்டும். காரணம் ஆணாதிக்க கோட்பாடு பெண்களை மட்டுமே இழிவு படுத்துவதாக இல்லை. ஆண்களையும் மனித தன்மை அற்றவர்களாக ஆக்கி வைத்து இருப்பதை உணர வேண்டும்.

பெண்களின் இயற்கையான உடல் அமைப்பு வாகு இவைகளை குறைத்து மதிப்பிடும் போக்கு பெரும்பாலான ஆண்களிடம் இருக்கிறது. Weaker sex என்பார்கள். இது தவறு. ஆண் பெண் இருவரின் இயற்கைத் தன்மை ஒன்றை ஒன்று சார்ந்தது என்பதை உணரவேண்டும். சமம் என்பதை ஏற்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்ப்பதில் பெண்கள் அல்லது பெண்கள் அமைப்புகள் மட்டுமே எதிர்க்க வேண்டும் என்பதில்லை. ஆண்களுக்கு அவர்களுக்கு சமமான அளவு பங்களிப்பு இருக்க வேண்டும். அத்தகைய சமூக அக்கறை இந்த விசயத்தில் ஆண்களிடம் போதிய அளவு இல்லாமல் இருப்பது வருத்தமானது.

தந்தைவழி கலாச்சாரதில் ஊறியதால் சிறுவயது முதலே ஆணாதிக்கச் சூழலில் வாழ்ந்து வருவதால் அதனால் அனுபவிக்கும் அனுகூலமான அம்சங்களை ஆண்கள் எளிதில் விட்டுக்கொடுக்க தயங்குவது தெரிகிறது. ஆனால் அதற்கு மாறுபட்ட சங்கடம் தரும் சூழலும் நிலவுவதை ஆண்கள் உணரவேண்டும்.

ஆண்கள் என்றால் வீரன், தீரன் சூரன் என்பதால் ஆண்தன்மை என்பதான ஆக்கிரமிக்கும் குணம் இல்லாதவரை பெண்தன்மை உடையவராக பரிகசிக்கும் நிலையும் இருப்பதை காண்கிறோம். பொட்டை என்று இகழப்படுவதை கவனிக்க வேண்டும்.

பாலியல் ஆற்றலை வெளிபடுத்தலே ஆண்தன்மை என்னும் கருத்து நிலவுகிறது. பெருகிவரும் பாலியல் வன்முறைக்கும் வன்கலவிக்கும் ஆண்மனதின் ஆழத்தில் வளர்த்தெடுக்கப்படும் இத்தகைய கருத்துகளே. இது எந்த அளவு சமூகச் சீர்கேட்டை உருவாக்கி இருக்கிறது என்பதை கவனிக்கத் தவறுகிறோம். மேலும்ஆண்பிள்ளை, ஆண்மை, என்பதெல்லாம் அவர்கள் வெளிப்படையாக மது, போதை பழக்கங்களை கைஆளுவதற்கு உதவுகின்றன என்பதையும் மறுக்க முடியாது.

சமத்துவமற்ற ஆண் பெண் உறவுநிலையில் பெண்களுக்கு பாலுறவு, இனப்பெருக்கம் அவைகள் தொடர்புடைய பால்வினை, எச் ஐ வி,  எய்ட்ஸ் போன்ற நோய்கள் பற்றிய அறிவின்மை நிலவுகிறது. இதனால் ஒட்டு மொத்த சமுதாயமும் கூடுதலாக பெண்களும் பாதிக்கப் படுகின்றனர்.

பெண்கள் மீதான அடக்குமுறையும் ஆதிக்க மனோபாவமும்  ஆண்களையும் பாதிக்கும் என்பதை உணர்ந்து ஆண்கள் பெண்ணிய சிந்தனையாளர்களாக மாறவேண்டிய தேவையாகிறது.
பெண்கள் தற்காலம் பெண்ணிய சிந்தனை வயப்பட்டு மாறிவரும் சூழலில் அவர்களது முன்னேற்றம் வேகமாக இருப்பது ஆண்களை பாதிக்கிறதாக கருதுகிறார்கள். எடுத்துக்காட்டாக ஆண்களின் வேலை இல்லா திண்டாட்டம் பெண்கள் அதிக அளவில் வேலைக்கு வந்து விட்டதால் என்று கருதும் மனப்பான்மை உருவாகி இருக்கிறது.

ஆண்கள்தான் குடும்பத்தின் காவலன் குடும்பத்தலைவன் குடும்பத்தை பராமரிக்கும் கடமை அவனுக்கே உரியது என்பதான ஆண்வழி சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட கோட்பாடுகள் தகர்ந்து வருகின்றன. இவைகள் ஆண்களுக்கு  சமூக உளவியல் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இப்பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும் தங்களுடைய ஆத்திரத்தில் இருந்தும் விரக்தியில் இருந்தும்  ஆண்கள் தப்பிப்பதற்க்கு போதை  குடி போன்ற தவறான பழக்கத்திற்கு அடிமை ஆகிறார்கள்.

ஆனால் பெண்கள் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் ஆண்களைப் போன்று தவறான பழக்கங்களைக் கைக்கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணம் ஆண்கள் தம்மை யார் கேள்வி கேட்க முடியும் என்ற எண்ணத்தில் வளர்க்கப் படுவதுதான். அந்த சூழலை எளிதாக ஆண்வழிச் சமுதாயம் வளர்த்து விட்டு இருக்கிறது.

ஆண்வழிச் சமூகத்தின் இத்தகைய பாதிப்புகள் சீரடைய வேண்டுமானால் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமநீதியும் சமஉரிமையும் கொண்ட சமத்துவ சமுதாயம் அமைவதே சரியாகும்.
இதைத்தான் பெரியார் போன்ற சமுதாய சீர்திருத்தர்கள் சாதி மத பேதமற்றதாக  சமத்துவ சமுதாயம் இருக்க வேண்டும் என்று சொல்லியது மட்டும் இல்லாமல் ஆண் பெண் இருவருமே சமமாக மதிக்கப்படும் சமுதாயமாகவும் அது இருக்கவேண்டும் என்றார்கள். சாதியைப் போன்றே நீ கீழ் நான் மேல் என்பதான வேற்றுமைகளும் பாரபட்சமான நீதியும் உரிமைகளும் ஆண் பெண் இருவரிடையே ஏற்படுத்தி வைக்கப் பட்டுள்ளன.

இன்றைக்கு இந்தியாவில் விவாகரத்து என்னும் மணவிலக்கு அதிகமாகிவருவதைக் காண்கிறோம். இதற்கு சொல்லும் காரணம் ஆண்வழிக் குடும்ப முறை மாறி வருகிறது என்றும் பெண்கள் படித்து வேலைக்கு போவதாலும் பெண்கள் அதிக சுதந்திரம் அடைந்ததாலும் ஆண்களின் பிடி தளர்ந்து விட்டதாலும் என்றெல்லாம் சொல்பர்கள் உண்டு. இது எந்த அளவு உண்மை என்பதை காணவேண்டும்.

ஆண்கள் பெண்களை தமக்கு சமானமாக கருதும் மனப்பக்குவம் இன்னும் முழுஅளவில் இல்லாததால் மணவிலக்குக்கு காரணம் எனலாம். காலம் காலமாக அடிமைகளாக இருந்த மகளிர் இன்று விடுதலை பெறும் அடுத்த கட்டத்திற்கு மாறும் சூழல் உருவாகி இருக்கிறது.  முழு சமுதாய மாற்றம் அடையாத நிலைத்திரிபு காலத்தில் இருக்கிறோம்.  இன்னும் முழு வீச்சில் செயல்பட்டு முழு மாற்றம் ஏற்படுமெனில் இத்தகைய பிரச்சனைகள் வராது.

ஆண் பெண் இருவரிடையிலான உறவுகளில் இன்றைய இடைக்கால மாறுநிலை உரசல்களை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை. இதனை இருபாலரும் புரிந்து நடப்பார்களானால் மணமுறிவு ஏற்படுவது குறையும்.

இன்னும் ஆண்வழி சமுதாய கோட்பாட்டிலேயே விடாபிடியாக ஆண்கள் இருப்பதும், சமுதாயச் சூழலே ஆண்களை வழிநடுத்துவதை புரிந்து கொள்ளாமல் பெண்கள் இருப்பதும்தான் பிரச்சனைகளுக்கு காரணம்.

மாறிவரும் தற்கால சமூகத்தின் பார்வையில் ஆண்கள் எப்படி காணப்படுகிறார்கள் சமூகம் அவர்களை எப்படி நிர்பந்திக்கிறது என்பதை எடுத்துகாட்ட பலவற்றை முன்வைக்கலாம். இவைகளை பெண்களும் புரிந்து கொள்ள வேண்டும்

-    ஆண்மகன் வீட்டு வேலை செய்தாலோ குழந்தை பராமரிப்பில் ஈடுபட்டாலோ பெண்டாட்டிதாசன்.
-    ஆண் அழக்கூடாது. ஆண் அழுதால் அழுமூஞ்சி. அழாவிட்டல் உணர்ச்சி இல்லாதவன்
-    மனைவியை அடித்தால் முரடன். மனைவி அடித்தால் தற்காப்பு.
-    ஆண் தானாக முடிவெடுத்தால் ஆதிக்கவாதி. பெண் தானாக முடிவெடுத்தால் விடுதலை விரும்பி.
-    பெண் விரும்பாத ஒன்றை ஆண் வலியுறுத்தினால் அதிகாரம். ஆண் விரும்பாததை பெண் வலியுறுத்தினால் சலுகை கேட்பது.
-    ஒரு பெண்ணை அழகி என்றால் அது பாலியல் துன்புறுத்தல். எதுவும் சொல்லாமல் இருந்தால் அழகுணர்ச்சி இல்லாதவன்.
-    பெண்னை வருணித்தால் பெண்பித்தன். இல்லை எனில் கற்பனை இல்லாத கபோதி
-    மனைவிக்கு பூ வாங்கி கொடுத்தால் காக்கா பிடிக்கிறவன். வாங்கி கொடுக்கவில்லை எனில் அக்கறை இல்லாதவன்
-    தலைவலி என்று மனைவி திரும்பி படுத்தால் அவள் சோர்வாக இருக்கிறாள். அதே காரணத்தால் கணவன் திரும்பி படுத்தால் அவள் மீது அன்பில்லாதவன்
-    அடிக்கடி உடலுறவு கொள்ள கணவன் ஆசைப்பட்டால் அவன் காமுகன். இல்லையெனில் அவனுக்கு வெறு யாருடனோ தொடர்பு

இப்படி பல வரைமுறைகள் ஆண்களை பெரும்பாலும் அளக்கின்றன. இவைகள் ஆண்பெண் உறவில் பெரும் தாக்கத்தை விளைவிக்கின்றன. இப்படிப்பட்ட முன்முடிவு கருத்துகள் விலக்கப்பட வேண்டும்.

இன்றைக்கு ஆண்பெண் சமத்துவத்தை கடைபிடிக்கும் வாழ்விணையர்கள் சிலர் இருக்கக் காண்கிறோம். அவர்கள் இல்லறம் மிகச் சிறப்பானதாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் ஆண்வழித் தலைமை குடும்ப முறைகளை கடைபிடிக்காமலும் சமுதாயத்தில் நிலவும் முன்முடிவு கருத்துகளுக்கு செவி சாய்க்காமலும் வாழ்வதே ஆகும்.
ஆண்பெண் இருவரின் இயல்பு நிலைகள் என நடை உடை பாவனைகளில் கட்டமைக்கப்பட்ட கோட்பாடுகளை மதிக்காமல் இருவரும் ஒருவரை ஒருவர் மனதாலும் செயலாலும் மதிக்கும் பண்பும் காரணம்.

சமையல் வீட்டுவேலை என்பவைகள் ஆணுக்கு உரியதல்ல. அதை ஆண் செய்தால் ஏளனமாகப் பார்த்த காலம் இருந்தது. இன்றைக்கு இது மாறி வருகிறது. திருமணம் ஆனதும் ஒரு ஆண் இத்தகைய செயல்கள் செய்வதை அவனுடைய பெற்றோர் அனுமதிக்க வேண்டும். குறை சொல்லி மருமகளை குற்றம் சுமத்துவது கூடாது. அப்படி செய்தால் உறவுகளுக்குள் சலசலப்பு ஏற்படும்.

ஒரு ஆண் சமையல் செய்வதும் குழந்தை பராமரிப்பில் ஈடுபடுவதும் சாதாரணமானது என்று கருதக் கூடிய காலம் வந்தால் ஒழிய பெண்களுக்கான முழு சுதந்திரம் வந்ததாக சொல்ல முடியாது.  பெண்கள் பொதுநலம் சார்ந்த அரசியல் பொருளாதார துறைகளில் பங்கெடுத்து சுதந்திரமாக செயல்பட்டு தம் ஆற்றலை வெளிப்படுத்த முடியாமல் போகும்.

ஆண் பெண் வேற்றுமை இயற்கையானதா? பிறப்பில் உயிரியல் சார்ந்த வேற்றுமை உள்ளது. ஆனால் அவர்களின் இயல்பு நிலை அல்லது இயற்கை குணம் என்று ஆண்மை பெண்மை என்று வரையறுக்கப்படுவது சரியல்ல. அதாவது ஆண்பெண் என்ற இரு பாலினம் இயற்கையில் ஒன்றை சார்ந்து ஒன்று இருக்கிறது. ஆதலால் ஒருவர் மேல் ஒருவர் கீழ் என்ற பேதம் கற்பிக்க இயலாது. ஆனால் ஆண்மை பெண்மை என்று வரைமுறை செய்யும் போது ஆண்மை உயர்ந்ததாகவும் பெண்மை தாழ்ந்ததாகவும் கருதப்படுகிறது. அதுவே ஆண் ஆதிக்கம் செலுத்தவும் பெண்கள் அடிமைகளாக இருக்கவும்  செய்கிறது.

ஆண்மையின் இயல்பு நிலை அல்லது குணம் என்பது முரட்டுத்தனமாகவும் பெண்மை என்பது மென்மையானதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது இயல்பானது அல்ல. மென்மையான குணங்கள் கொண்ட ஆண்களும் முரட்டுத்தன்மையுடைய பெண்களும் இருக்கிறார்கள். அதுவே இயற்கை. ஆனால் ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் சில குணங்களை ஆண்மை பெண்மை என்கின்ற பெயரில் கட்டுப்பாடான வரைமுறைகளை சுமத்தி பழக்கப் படுவது இயற்கைக்கு மாறானது.

மனிதரில் ஆண் பெண் என்ற இரு உயிரியல் வேறுபாடு  கொண்ட பிரிவில் இரண்டுக்குமான தேவை சமமானது. ஒருவர் இன்றி ஒருவர் இல்லை. இத்தகைய கருத்தியல் புதியதும் அல்ல. இந்திய தத்துவத்தில் இறைவனை அர்த்தநாரி என்றும் தமிழகத்தில் தாயுமானவன் என்றும் சொல்லப்படுவதை பொறுத்திப் பார்க்கலாம். மேலும் இத்தகைய கருத்து உலகம் முழுமையும் கூட இருந்து இருக்கிறது. சீனாவில் யின்யாங் ( yin - பெண் yang - ஆண்) என்றும் ஐராப்பியாவில் ஆண்ட்ரொகனி ( androgyny ) என்றும் சொல்வர். அதாவது பெண்வழி சமூகம் ஆண்வழித் தலைமையில் மாறியபிறகு ஏற்பட்ட சிக்கல்களை சரிசெய்யவும் பெண் இனத்தை சமாதானம் செய்யவும் இத்தகைய கருத்துகள் உருவாகி இருக்கலாம்.

இருந்தாலும் இதில் காண வேண்டிய உண்மை என்னவெனில் ஆண் பெண் இருவரும் சமமானர் என்பதே. ஆகவே ஆண் ஆதிக்கம் செய்வதில் நேர்மையோ நியாயமோ இல்லை என்பதை உணரலாம்.  பெண்மை அறிவு, அன்பு, தெளிவு, மென்மை என்றும் ஆண்மை என்பது பகுத்தறிவு, செயல், கட்டுப்பாடு, பலம், வன்மை என்றும் பொதுமை படுத்தல் கூடாது. இவ்வாறு சமூகத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான குணங்களாக வரைமுறை ஏற்படுத்தியதின் விளைவுதான் இன்றைய நடைமுறை சிக்கல்கள். அவர்களுக்குள் ஆக்கபூர்வமான இணைதல் வேண்டும். ஆண் ஆதிக்க சமுதாயத்தில் ஆண்கள் தங்களுக்குள் இருக்கும் பெண்ணையும் பெண்கள் தங்களுக்குள் இருக்கும் ஆண்ணையும் மறுக்கும்படி வலியுறுத்துகிறது. அதுதான் சமுதாயத்தில் குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்குகின்றன.

பொது இடங்களில் ஆண்களின் நடை உடை தோற்றம் எப்படி இருந்தாலும் ஏற்கப்படுகிறது. இந்தியாவில் ஒரு ஆண் பொது இடங்களில் எந்தவித கூச்சம் இல்லாமல் வெட்கப்படாமல் சிறுநீர் கழிக்கலாம். ஆனால் பெண்ணால் அப்படி முடியாது. ஆண்களுக்கு இத்தகைய மனப்பான்மை இருக்க காரணம் என்ன என்பதை சிந்திக்க வேண்டும்.

ஆண்தன்மை பெண்தன்மை என்பதை இயற்கையான உயிரியல் அடிப்படையில் இல்லாமல் சமூக ரீதியில் கட்டமைக்கபட்டுள்ளது. ஆண் என்பவன் அழக்கூடாது. பெண் சிரிக்கக் கூடாது. ஆண் தன்பலவீனத்தை வெளிப்படுத்தக் கூடாது. ஆண்தான் குடும்பத் தலைமை ஏற்று காப்பாற்ற வேண்டும். இரவில் ஆண் எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம். பெண்கள் அப்படி இருக்கக் கூடாது. இருட்டுவதற்கு முன்பே பெண்கள் வீடு திரும்பிட வேண்டும். இப்படியான கட்டுப்பாடுகளில் வளர்ந்த சமூகத்தில் இன்றைய மாறும் சூழலில் இதற்கான எதிர்ப்பு இருக்கச் செய்கிறது.

பெண்கள் மீதான வன்முறை வன்கலவி போன்ற செயல்கள் இந்த கட்டுபாட்டில் ஓட்டை ஏற்பட்டதால் என்ற வாதமும் தொடர்கிறது. ஆனால் இதன் முக்கிய காரணம் ஆண்கள் சிறுவயது முதலே தனிப்பட்ட கவனிப்பு, அன்பு, உணவு கல்வி இவைகளை பெறுவதில் முன் நிற்கிறார்கள். பெண்களுக்கு அந்த வாய்ப்பு குறைவாக இருக்கிறது. பெண்கள் எதையும் கொடுப்பதற்காகவும் ஆண்கள் பெறுவதற்காகவுமே இருப்பதாக சமூகபாடம் அமைந்திருக்கிறது. ஆண்கள் தம் பெண்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதை இந்த சமூகம் எதிர் பார்க்கிறது.

ஆங்கிலத்தில் Husband  என்ற சொல்லின் பொருளை animal Husbandary என்னும் சொல்லோடு ஒப்பிடும் போது அந்த வார்த்தையின் பொருள் எளிதில் விளங்கும். தமிழில் கணவன் என்றால் கண்+அவன் என்பதாகும். அவளுக்கு கண்போன்றவன் கண்ணாளன் கணவன். பெண்கள் கணவரை கண்போன்று காக்கப் படவேண்டும் என்று பொருள் கொள்வர்.  ஆனால் கண்+அவள் கண்ணவள்= கணவள் என்று சொல்வதில்லை. மனைவி என்ற சொல் மனையில் இருப்பவள்  அல்லது வீட்டுக்காரி என்றே பொருள்படும். திருக்குறளில் வாழ்க்கைத்துணை என்கிறார் வள்ளுவர். இந்த சொல்லில் பால் வேறுபாடு இல்லை. வாழ்க்கைத் துணை என்பது  ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும் சொல்லாக இருக்கிறது. தற்கொண்டான் என்றும் கொழுநன் என்றும் கணவனை வேறு குறள்களில் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.  ஆண் என்றால் ஆள்பவன் என்றும் பெண் என்றால் பேணப்படுபவள் என்றும்  பொருள்படும்.

திருக்குறளில் வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தில் ”சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் நிறை காக்கும் காப்பே தலை?” என்று ஒரு குறள் வருகிறது. மகளிரின் நிறை என்னும் பெருமையும் சிறப்பையும் போற்றாமல் அவர்களை சிறைக் கைதிகளைப்போல் அடிமைகளாக  எவனாவது நடத்தலாமா? என்று கேட்பது வள்ளுவர் காலம் தொட்டே பெண்கள் மீது ஆண்களின் ஆதிக்கம் இருந்தது என்பது விளங்குகிறது.

மேலும் சமய நூல்கள் குறிப்பாக இந்து சமய புராண இதிகாசங்களில் வரும் கதைகள் பலவும் பெண்ணடிமை முறைமையை பறைசாற்றுவதாகவே இருக்கின்றன என்பது எல்லோரும் அறிந்தது.  எவ்வளவு ஆற்றல் அல்லது சக்தி பெற்றவளானாலும் பிறந்த வீட்டுக்கு போக கணவன் அனுமதி வேண்டும் என்பதை விளக்கும் சிவன் பார்வதி நடனம், சிவத் தாண்டவம், எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் கணவன் கால் பிடித்துவிடுவதே மனைவியின் கடமை என்பதாக பாற்கடல் பெருமாள் கால்பிடித்துவிடும் லட்சுமி, எவ்வளவுதான் படித்திருந்தாலும் கணவன் வாக்குக்கு கட்டுபட்டவள் மனைவி என நாவில் சரசுவதியை வைத்திருக்கும் பிரம்மா இவைகள் எல்லாம் பெண்ணடிமை போற்றும் புனைவுகள் அல்லவா.? கல்வி செல்வம் வீரம் மூன்றிற்கும் பெண் கடவுளை கொண்ட ஒரு சமுதாயத்தில் பெண்களுக்கு இம்மூன்றின் உரிமையும் மறுக்கப்பட்டு வந்ததற்கான காரணம் புரிகிறது அல்லவா?
அந்த காலத்தில் இப்படி சமயகருத்துகளாக முன்வைக்கப்பட்ட எண்ணங்கள் இன்று ஊடகங்கள் மூலம் பரப்பப்படுகின்றன. விளம்பரங்கள் திரைக்கதைகள் தொலைக்காட்சி தொடர்கள் இவைகளில் பெண்களை சித்தரிக்கும் விதம் எப்படிபட்டன என்பதை விரிவாக சொல்லவேண்டியதில்லை.

ஆண்கள் WWF மல்யுத்த நிகழ்ச்சியின் மூலம் மற்றும் பல விளையாட்டுகள் மூலம் பெரிய வீராதி வீரர்களாக சித்தரிக்கப் படுவதையும் பார்க்கிறோம். சிறுவர்கள் இந்த வீரர்களின் படங்களை சேகரிப்பதும் அவர்களைப் போல் இருக்க ஆசை படுவதும் அதனால் தங்களைவிட பலவீனமானவர்களை சிறுமிகளை அடிப்பதும் துன்புறுத்துவதுமான பழக்கங்கள் இயல்பாக வந்து விடுகின்றன.

திரைப்பட கதாநாயகர்கள் பற்றியும் அவர்களது இரசிகர்களைப் பற்றியும் இதேபோலவே மதிப்பிட முடியும். காவல்துறை, பாதுகாப்புப்படை போன்ற அமைப்புகளில் இப்போதுதான் பெண்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பொதுவாக இந்த அமைப்புகள் ஆண்தன்மை கொண்ட ஆதிக்கம் செலுத்தும் அமைப்புகளாகவே அறியப்படுகின்றன. அப்படி இருக்க அதில் சேரும் பெண்களும் ஆண்தன்மை உடையவராக மாறவேண்டி இருக்கிறது.

ஆதலால் ஆண் பெண் இருவருமே இயல்பில் அவரவர்க்கு விதிக்கப்பட்ட தன்மையினராக இருப்பதில்லை. உயிரியல் அடிப்படையில் அப்படி இல்லை. ஆனால் சமய கலாச்சார அரசியல் பொருளாதார கோட்பாடுகள் மூலமக கட்டமைக்கப் படும் நெறிமுறைகளால் சுலபமாக மக்களை கட்டுப்படுத்தமுடிகிறது.

சமமற்ற நீதி அற்ற சமூக முறைகளை நீடிக்கச் செய்வது இத்தகைய படிநிலை அமைப்பு முறைகளே ஆகும். சாதி நிறம் தொழில் எல்லாமே.  படிநிலை அமைப்பால் ஒன்று மேலானது மற்றது கீழானது என்னும் வரைமுறைக்குள் ஆண் பெண் என்னும் பாலினமும் சேர்ந்துவிடுகிறது. ஆண் உயர்ந்தவன் பெண் தாழ்ந்தவள் என்னும் பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுகோப்பான பிரிவு இல்லை என்றால் சமூகம் பாழாகி விடும் என்று பெண்களும் நினைப்பதுதான் அடிமைத்தனம்.

பெண்கல்வி, பெண்களுக்கான சொத்துரிமை, கைம்பெண் திருமணம்,  திருமணத்திற்கு மணப்பெண் ஒப்புதல், கருத்தடை போன்ற பெண்களின் முன்னேறத்திற்கான சில நடைமுறைகள் மெல்ல மெல்ல வருகின்றன. ஆனால் காதல், கற்பு, விபச்சாரம் என்ற விசயங்களில் இன்னும் விழிப்புணர்வு தேவைபடுகிறது. இன்னும் கடந்து செல்ல வேண்டிய பயணம் நீண்டு கொண்டே போகிறது. குறிப்பாக கற்பு எனப்படுவது பெண் மட்டும் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம் ஆண் எப்படியும் இருக்கலாம் என்பது தவறு.

ஆண் பெண் இருவருக்கும் கற்பு எனும் ஒழுக்கம் பொதுவானது. இதைத்தான் திருவள்ளுவர் ”பிறன்மனை நோக்கா பேராண்மை” என்கிறார். ஒரு ஆண்மகனுக்கு தன்மனைவி அல்லாத வேறு ஒருவளை காம எண்ணத்துடன் நோக்காமல் இருப்பதுதான் பேராண்மை என்கிறார்.  சமுதாயத்தில் ஆண்தன்மை என்று வேறு எத்தனையோ சொல்லப்பட்டாலும் அவைகள் பெரிய விசயமே அல்ல என்பது அவரது எண்ணமாக இருப்பது தெளிவாகிறது.

இன்றைக்கு ஆண் மேலானவன் பெண்கீழானவள் என்னும் சிந்தனை சிதைந்து வருகிறது. இது ஏற்க கூடியது அல்ல என்கிற எண்ணம் மேலோங்கி வருகிறது. பல்வேறு நாடுகளின் சட்டங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கையும் இதுவாக இருக்கின்றன. ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்ற கருத்து கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் நடைமுறையில் ஆண்வழிச் சமுதயத்தின் ஆதிக்கம் தொடரவே செய்கிறது. ஒரு ஆண் அல்லது பெண் தம் நாட்டுச் சட்டப்படியும் ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைபடியும் சமானமாக வாழ்வதற்கு போராட வேண்டி இருக்கும் என்பதே இன்றைய நிலவரம்.

ஆண்களும் பெண்களும் ஒரேமாதிரியாக இருக்க வேண்டும் அவர்களுக்குள் வித்தியாசம் இருக்கக் கூடாது என்பதும் தவறானது. அப்படி புரிந்து கொண்டு செயல்படும் பெண்களால் பெண்களின் முன்னேற்றம் பெண்விடுதலை தாமதப்படுகிறது என்றும் சொல்லலாம்.
எல்லா ஆண்களும் அல்லது எல்லா பெண்களும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல என்பதை உணர வேண்டும். அவர்களுக்கு இடையில் இருக்கும் வித்தியாசங்கள் செயற்கையானவை உருவாக்கப்பட்டவை என்ற புரிதல் வேண்டும்.

ஆண்மை பெண்மை என்பதற்கான வரையரைகளை எவ்வளவுக்கு எவ்வளவு சரியென்று ஏற்று நடக்கிறோமோ அவ்வளவு தொலைவு இடைவெளியும் வேற்றுமைகளும் பெரிதாகி போகிறது. ஆண்கள் தங்கள் மேலாதிக்கத்தை நிலை நாட்டுபவராகவும் பெண்கள் அதை எதிர்ப்பவர்களாகவும் இருக்கின்றனர். ஆண்மை பெண்மை இரண்டின் தன்மைகள் பண்புகள் குணங்கள் யாவும் எதிர் எதிரானதாக இருக்கின்றன. எல்லா ஆண்களையும் அல்லது எல்லா பெண்களையும் ஒரே மாதிரியாக இருக்கச் செய்வது வலியுறுத்துவது சரியல்ல. இது இயற்கைக்கும் நடைமுறைக்கும் நடுநிலைமைக்கும் எதிரானது.

ஆண் பெண் இருவரையும் ஆண்வழிச் சமூகம் வேறு வேறாக மதிப்பிடுகிறது. அப்படியே  வளர்த்து எடுக்கிறது. பாலின அடிப்படையில் உயிரியல் அமைப்பால் இருக்கும் ஆண் பெண் பிரிவுகள் ஏற்றுக் கொள்ளக்கூடியது. ஆனால் பிரச்சினை சமமாக மதிக்காததாலும் அதிகாரமும் சேர்க்கும் செல்வமும் கொழிக்கும் வளங்களும் நியாயமான முறையில் பங்கீடு செய்யாததால் வருகிறது.

இறுதியாக நாம் என்ன முடிவுக்கு வரலாம் என்றால் ஆண்பெண் சமத்துவம் நிலவ வேண்டும். இயற்கையாக உடல் அளவில் உயிர் இயல் முறையில் இருக்கும் ஆண்பெண் வேறுபாடு ஏற்கக்கூடியது. தந்தைவழித் தலைமை குடும்பங்கள் உருவாகி ஆண்வழிச் சமூகமாக மாறிய பின் ஏற்பட்ட ஆண்மை பெண்மை என்பதற்கான வரைமுறைகள் இயற்கையானதும் இயல்பானதும் நீதியானதும் நேர்மையானதும் அல்ல என்பதை உணரவேண்டும்.

இதனால் எற்படும் சமூக பாதிப்புகள் குறிப்பாக பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் ஏற்படுவதை தடுக்க முற்பட வேண்டும் இதில் ஆண்களின் பங்கு கூடுதலாக வேண்டும். ஆண்பெண் சமத்துவ வாழ்க்கைக்கு இருபாலரும் முழு அளவிலான ஆதரவை தருவதென்பது ஒருவரை ஒருவர் மதித்து வாழ்வதேயாகும். அது தூய அன்பினால் மட்டுமே முடியும்.


”அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு” (குறள்80) என்கிறார் வள்ளுவர்.  அன்புள்ளம் கொண்டு இயங்குவதே உயிர் உள்ள உடல் அப்படி இல்லையெனில் அந்த உடல் வெறும் தோலால் போர்த்தப்பட்ட எலும்பு கூடுதான். இதை அறிந்து ஒவ்வொரு ஆணும் பெண்ணும் வாழ்வார்களேயானால்  அவர்கள் உறவில் எந்த விரிசலும் வேற்றுமையும் இருக்காது என்பது உண்மை.

( கம்லா பசின் என்பவர் எழுதிய  ஆங்கில நூல் ஒன்றை வாசித்தபோது எடுத்த குறிப்புகளின் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டது)

No comments:

Post a Comment