அடுத்த சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று திமுகழகம் ஆட்சிக்கு வருமானால் மதுவிலக்கு அமுல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் கலைஞர் அறிவித்து இருக்கிறார்.
சொன்னதை செய்வதில் திடமான உறுதி கொண்டது திமுக. அந்த வகையில் மதுவிலக்கு நிச்சயமாக திமுக ஆட்சிக்கு வந்தால் அமுல்படுத்தும் என்பதில் யாரும் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.
சிலர் இது குறித்து இப்போது மட்டும் அல்லாமல் பல காலமாகவே கலைஞர் மீது ஒரு அவப்பழி சுமத்தி வருகின்றனர். தமிழர்களுக்கு மதுவை குடிக்க கற்றுதந்ததே கலைஞர்தான் என்று.சமயம் வாய்க்கும் போதெல்லாம் சந்திலே சிந்து பாடுவார்கள். அவர்கள் ஒன்று விபரம் தெரியாத விடலைப் பிள்ளைகளாகவோ அல்லது விவரம் தெரிந்த விசமிகளாகவோதான் இருப்பார்கள்.
சென்னை மாகாணம் அல்லது ராஜதானி என்று அழைக்கப்பட்ட தமிழகத்தில் 1937 ஆண்டு திரு சி.ராஜகோபாலாச்சாரியார் முதல் அமைச்சராக இருந்த போது மதுவிலக்குச் சட்டம் அமுலுக்கு வந்தது முதலாக மதுவிலக்கு கொள்கை இந்தியாவில் பட்ட பாட்டையும் தமிழகத்தில் தற்போது கலைஞர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படும் சூழல் வரை நடந்தவை என்ன?
1965 ல் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் மதுவிலக்கு திட்டம் கைவிடப்பட்டது. மதுவிலக்கு நல்லதுதான் ஆனால் நல்லவை அனைத்தையும் சமுதாயம் எர்றுக்கொள்வதில்லையே என்று சமாதானம் கூறினார் அன்றைய முதல் அமைச்சராக இருந்த காங்கிரசை சார்ந்த திரு வி.பி.நாயக் அவர்கள்.
1967 ஆம் ஆண்டு திமுகழகம் தமிழக்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறது. அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சர் ஆனார். அப்போது தமிழகம் தவிர்த்த மற்ற சுற்றுபுற மாநிலங்களில் மதுவிலக்குக் திட்டம் கைவிடப்பட்டுவிட்டது.
அடுத்ததாக கேரளமும் கைவிட்டது
கள்ளச்சாராயம் பெருகி விட்டது இனி மதுவிலக்கு வெற்றி அடையமுடியாது என்று மேற்கு வங்காள முதல்வர் பி.சி.சென் அதே ஆண்டு புனாவில் நடந்த காங்கிரசு ஊழியர் கூட்டத்தில் பேசுகிறார். வலுக்கட்டாயமாக சட்டங்களின் மூலம் மது விலக்கம் செய்வது முடியாத காரியம் என்று சொல்கிறார்.
1965 ல் அக்டோபர் மாதம் மைசூர் மாநிலத்தில் அதாவது இன்றைய கர்நாடகாவில் மதுவிலக்குக்கு முழுக்கு போடப்பட்டது. அப்போது கர்நாடகாவில் விசித்திரமான நடைமுறை ஒன்று இருந்தது. பெங்களூரில் மட்டும் மது விலக்கு இல்லாத நிலை இருந்தது. பிறகு மாநிலம் முழுதையும் பெங்களூராக்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டது.
1966 ல் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் மாநிலங்களில் மது விலக்கு கைகழுவப்பட்டது.
1965 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வாரம் புதுடெல்லியில் மாநில அரசுகளின் கருத்தை அறிய மத்திய அரசால் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. டேக்சந்த் என்பரின் தலைமையில் மதுவிலக்குக் குழு ஒன்று அப்போது அமைக்கப்பட்டு அவர்களின் அறிக்கை மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டு இருந்த நேரம் அது.
1970 க்குள் எல்லாமாநிலங்களிலும் மதுவிலக்கு அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து அந்த குழுவினரால் வைக்கப்பட்டு இருந்தது. இது இயலாத காரியம் என்று பல மாநில முதல்வர்களும் தெரிவித்தார்கள்.
மதுவிலக்கை செயல்படுத்தினால் வருமானத்தை இழக்க வேண்டி இருப்பதால் 100 சதவித இழப்பை மத்திய அரசு ஈடுகட்டினால் மான்யமாக தர ஒப்புக் கொண்டாலன்றி மதுவிலக்கை அமுல் படுத்த தயாராக இல்லை என்று மேற்கு வங்கம்,மகாராஷ்ட்ரா, ஒரிசா, மத்திய பிரதேசம், பீகார்,ஆந்திரா, மைசூர், அசாம் மாநிலங்கள் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தன.
1965 டிசம்பரில் மைசூர் மாநிலத்தில் திரு நிஜலிங்கப்பா முதல்வராக இருந்தபொது மதுவிலக்கு கைவிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமதி யசோதா தாசப்பா என்கிற அமைச்சர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் மத்தியில் முன்னாள் அமைச்சராக இருந்த திரு மொரார்ஜி தேசாய் அவர்கள் காங்கிரசு ஊழியர் கூட்டம் ஒன்றில் பேசுகையில் இந்திய நாடெங்கும் மதுவிலக்கு அமுல்படுத்தப்பட வேண்டும் என்று கருத்துரை செய்தார். இது பற்றி காங்கிரசு தலைமையுடன் பேசப்போவதாகவும் சொன்னார். அப்போது திரு காமராசர்தான் காங்கிரசின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைக்கு திரு காமராஜர் நினைத்து இருந்தால் அகில இந்திய அளவில் மதுவிலக்கு கொண்டு வந்திருக்க முடியும்.
மராட்டியமும் மைசூரும் மதுவிலக்கை தளர்த்திய பிறகு காங்கிரசு கட்சிக்குள் பெரும் கருத்து மோதல்கள் உருவாகின.. சில தலைவர்கள் காந்தியின் உயிர் லட்சியமான மதுவிலக்கை காங்கிரசு அரசுகள் கடைபிடிக்காமல் கைகழுவுவது குறித்து கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த சந்தடியில் அப்போது பாண்டிச்சேரியின் துணை ஆளுனராக இருந்த திரு சைலம் என்பவர் ஒரு கூட்டத்தில் பேசும் போது இந்திய யூனியனுடன் சேர்வதற்கு முன்பை விட தற்போது பாண்டிச்சேரியில் சீமை சாராயக் கடைகள் பெருகிவிட்டது என்றும் மக்கள் ஆதரவு தந்தால் பாண்டிச்சேரியில் மதுவிலக்கு கொண்டுவரும் பிரச்சனையை மேற்கொள்வேன் என்றும் சொன்னார்.
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் எப்போதுமே மதுவிலக்கு இருந்ததில்லை. தமிழ் நாட்டில் ம்துவிலக்கு அமுலில் இருந்தபோது குடிக்க எண்ணம் உடையவர்கள் பாண்டிசேரி காரைக்கால் பகுதிக்குச் சென்று குடித்துவிட்டு வருவதும்.. அங்கிருந்து பெருமளவில் கடத்தல் செய்வதும் சர்வ சாதாரணமாக இருந்தது.
தென் ஆற்காடு, வட ஆற்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களில் இந்த வகை கடத்தல் சரக்குகளுக்கு பஞ்சம் இருந்ததில்லை. பிற்பாடு கேரளா மைசூர் ஆந்திரா மாநிலங்களில் மதுவிலக்கு தளர்த்தியபிறகு தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கு அமுலில் இருந்தாலும் குடிப்பதற்கு பெரிய தடை இருந்தது என்று சொல்ல முடியாது.
அதுமட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் அப்போது போதைப் பிரியர்களுக்கு தாகசாந்தி செய்ய அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்து கடைகள் இருந்தன. அங்கே கசாயம், அரிஷ்டம், அஸ்வம் என்கிற பெயரில் சரக்கு கிடைத்துக் கொண்டுதான் இருந்தது.
அது மட்டும் இல்லாமல் அரசியல் மற்றும் அதிகாரிகளின் பின்புலத் துணையுடன் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்கள் இருந்தனர். ஊருக்கு வெளியே சவுக்குத்தோப்பு, முந்திரித்தோப்பு, குப்பைமேடு பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் கலால்துறை காவலர்கள் எப்போதாவது சென்று அவர்களைப் பிடிப்பதும் ஒரு சடங்காகவே இருந்து வந்தது. சிலநேரங்களில் கள்ளச்சாராயம் குடித்து மரணம் சம்பவிக்கும்.
இந்த நிலையில்தான் 1967 ல் தமிழகத்தில் திமுகழகம் ஆட்சிக்கு வந்தது. முதல் அமைச்சர் அறிஞர் அண்ணா மதுவிலக்குக் கொள்கையில் தீவிரமாக இருந்தார். அவர் மறைவுக்குப் பிறகு கலைஞர் 1969 ல் முதல்வரானார். 1971 தேர்தலில் 183 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகிறார்.
அப்போதுதான் 1971 ஆகஸ்ட் மாதம் தற்காலிகமாக மதுவிலக்கு தள்ளிவைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டது. அதை அறிவிக்கும் முன்பு கோவையில் நடந்த திமுக செயற்குழு பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது. அப்போது திமுகவில் இருந்த எம்ஜிஆர் மதுவிலக்கை ஒத்திவைப்பதற்கு ஆதரவாக பேசினார். அதனை நான் ஏன் பிறந்தேன் என்னும் ஆனந்தவிகடனில் வெளியான கட்டுரைத் தொடரில் அவரே தெரியப்படுத்தி இருக்கிறார்.
தந்தை பெரியாரும் மூதறிஞர் ராஜாஜியும் பெருந்தலைவர் காமராஜரும் உயிரோடு இருக்கிறார்கள். ஒத்துழையாமை காலத்தில் கள்ளுக்கடை மறியலின் போது தன் வீட்டு தோட்டத்தில் இருந்த தென்னைமரங்களை வெட்டிச் சாய்த்த தந்தை பெரியார் கள்ளுக்கடை திறப்புக்கு தமிழக அரசிற்கு ஆதரவு தருகிறார். 1937 ல் மூடிய ராஜாஜி வேண்டாம் என்கிறார்.
காந்தியார் கனவை நனவாக்குவோம் என்று சொன்ன காங்கிரசாரே 1967 க்கு முன்பே அதாவது காங்கிரசு இரண்டாக உடைவதற்கு முன்னரே கர்மவீரர் காமராஜர் காங்கிரசின் அகில இந்திய தலைவராக இருந்த போதே தாங்கள் ஆட்சியில் இருந்த மாநிலங்களில் மதுவிலக்கை கைவிட்டபின் அது பற்றி பேச எந்த காங்கிரசுக்கும் தகுதி இல்லாத சூழலில் தமிழ்நாட்டில் திமுக அரசின் முடிவுக்கு எதிராக அவர்களால் முனக மட்டுமே முடிந்தது.
தீ பந்த வளையத்திற்கு நடுவே கற்பூர கட்டியாக தமிழகம் எப்படி இருக்க முடியும் என்றும் மதுவிலக்கு தற்காலிகமாகதான் ஒத்தி வைக்கிறோம் என்றும் சொன்ன கலைஞர் மதுவிற்கு எதிரான பிரச்சாரக் குழு ஒன்றையும் அமைக்கிறார். அதன் தலைவராக எம்ஜிஆரை நியமிக்கிறார். குடி குடியை கெடுக்கும் குடி வீட்டுக்கு நாட்டுக்கு கேடு விளைக்கும் என்ற சொற்தொடர்கள் அப்போது உருவானதுதான்.
1973 ஆகஸ்ட் மாதம் கள்ளுக்கடைகள் மூடப்படுகின்றன.
1974 செப்டம்பரில் சாராயக்கடைகளும் மூடப்பட்டு முழுமையான மதுவிலக்குச் சட்டம் வருகிறது.
கலைஞர் ஆட்சியில் இருக்கும் போதே அவர் சொன்ன பிரகாரம் தற்காலிகமாகத்தான் மதுவிலக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஒன்றை கவனிக்க வேண்டும் மது விலக்கு மீண்டும் வந்த போது தேர்தல் நேரம் அல்ல.
1976 பிப்ரவரி மாதம் திமுக ஆட்சி நெருக்கடி காலகட்டத்தில் கலைக்கப்படுகிறது. 1972 ல் திமுகவை விட்டுப் பிரிந்த எம்ஜிஆர்
1977 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறார். 1989 வரை அதிமுக ஆட்சி தொடர்ந்து தமிழகத்தை ஆண்டது.
மது குடிக்காதவர் என்று மக்களால் நம்பப்பட்ட எம்ஜிஆர் ஆட்சியில்தான் மீண்டும் மதுவிலக்கு கைவிடப்பட்டது. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு 1981 மே மாதம் கள் சாராய விற்பனை அனுமதிக்கப்பட்டது.
அதுமட்டும் அல்ல முதல் முதலாக 4 தனியார் நிறுவனங்களுக்கும் ஒரு கூட்டுறவு நிறுவனத்திற்கும் மது பானம் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது எம்ஜிஆர் ஆட்சியில்தான். தனியார் துறையில் பீர் தயாரிக்கும் நிறுவனத்திற்கு அனுமதியும் எம்ஜிஆர் ஆட்சியில்தான் தரப்பட்டது.
1983 ஜூலை மாதம் தமிழ்நாடு விற்பனைக் கழகம் TASMAC நிறுவனம் துவங்கப்பட்டது எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில்தான்.. அதற்கு என்ன காரணம் காரணம் தெரியுமா?
அப்போது 10 தனியார் சாராய உற்பத்தியாளர்களும் 15 சாராய மொத்த விற்பனையாளர்களும் இருந்தனர். எம்ஜிஆர் ஆட்சியில் சாராய மொத்த வியபாரிகளுடன் நல்ல புரிதல். சாராய சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறந்தது. அதற்கு சாட்சியாக இன்றைக்கு பல பொறியியல் மருத்துவ கல்லூரிகள் அவர்கள் துவக்கியவை இருக்கின்றன.
அரசு வருவாய் சுரண்டப்பட்டது. இதை தட்டிக் கேட்டவர் கலைஞர். சில தனிப்பட்ட சாராய வியபாரிகள் வியபார நோக்கில் அரசை ஏமாற்றுவதற்கு இடம் கொடுப்பதாக சொன்னார். அதற்காக அரசே மொத்த வியபாரத்தை ஏற்று நடத்துகிறது பார், தனியார் மயம் ஒழித்து விட்டோம் பார் என்று சொல்வதற்கு டாஸ்மாக் நிறுவனம் தொடங்கப்பட்டது.
ஆனாலும் 10 தனியார் சாராய உற்பத்தியாளர்கள் இருந்தார்கள். 15 நபர்களிடம் இருந்த மொத்த வியாபாரத்தை டாஸ்மாக் எடுத்துக் கொண்டது. சில்லறை வியாபாரம் ஏஜன்சி முறையில் டாஸ்மாக் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டது. இதிலும் கோல்மால் நடப்பதை சுட்டிகாட்டியது திமுக. மேலும் அதனால் அரசுக்கு சிக்கல் வராமல் செய்ய மறுபடியும் சில்லறை வியாபாரத்தை 1986 ஜூலை மாதம் ஏலமுறைக்கு மாற்றப்பட்டது.
1987 ஜனவரியில் கள் சாராயம் விற்பனை நிறுத்தப்பட்டது. ஆனாலும் 2000 க்கு மேற்பட்ட சில்லறை கடைகளில் IMFL விற்பனை அமோகமாக நடந்தது. அப்போது 5 மதுபான தொழிற்சாலையும் ஒரு பீர் தொழிர்சாலையும் இயங்கிவர அனுமதி அளிக்கப்பட்டது.
1989 ஜனவரி மாதம் கலைஞர் அரசு மீண்டும் தமிழகத்தில் அமைகிறது.
1990 ல் மதுவிலக்கு சட்டத்தில் இருந்த சந்து பொந்துகள் அடைக்கப்பட்டு தனியார் எவரும் ஆதாயம் அடையாதபடி பார்த்துக் கொண்டதால் அரசின் வருமானம் உயர்ந்தது.
அது மட்டும் அல்ல மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய ஒரு குழு உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் 1971 ல் எம்ஜிஆர் தலைமையில் இப்படிப்பட்ட குழு ஒன்றை உருவாக்கியவர் கலைஞர். இடையில் அதே எம்ஜிஆர் ஆட்சியில் மதுவுக்கு எதிரான பிரச்சாரம் மேற்கொள்ளவே இல்லை. ஆனால் கலைஞர் ஆட்சி பீடம் ஏறியதும் மது விலக்குப் பிரச்சாரக் குழுவை நியமிக்கிறார்.
அந்த குழுவில் இருந்தவர்கள் யாரெல்லாம் தெரியுமா?
திரு. கிருஷ்ணசாமி பாரதி
உயர்திரு குன்றக்குடி அடிகளார்
திரு வெங்கடேச தீட்சதர் எம்.எல்.ஏ
திருமதி பொன்னம்மாள் எம்.எல்.ஏ
திரு. உக்கம்சந்த் எம்.எல்.ஏ
எழுத்தாளர் சிவசங்கரி
நடிகர் சிவகுமார்
திரு ஜி.வீரைய்யன் எம்.எல்.ஏ
பத்திரிகையாளர் சோ ராமசாமி
திரு அழகர்சாமி எம்.எல்.ஏ
திரு அப்துக் லத்தீப் எம்.ல்.ஏ
திரு கோவை இராமநாதன் எம்.எல்.ஏ
திரு அய்யண்ணன் அம்பலம்
திரு எஸ்.குகன்
திருமதி சாந்தி ரங்கநாதன்
திரு எல்.பழமலை, இணை செயலாளர், மதிவிலக்கு & ஆயத்தீர்வு துறை
குடிக்கு அடிமையாகி முற்றிப்போனவர்களை குணப்படுத்திட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன
இளையதலைமுறையும் ஏழை எளிய மக்களும் வாழ்வை பாழாக்கிக் கொள்ளாமல் தடுத்திட பிரச்சாரம் செய்யப்பட்டது
ஏவிஏம் நிறுவனம் தயாரித்த ரகுவரன் நடித்த தியாகு ( ஒரு மனிதனின் கதை) என்னும் திரைப்படம் அரசு சார்பில் வெளியிடப்பட்டது.
பள்ளிகூடம் கோயில்கள் பக்கத்தில் மதுபானக் கடைகள் இருக்கக்கூடாது என்பது சட்டவிதி. அந்த விதி எப்படி பின்பற்றப்பட்டது தெரியுமா? அறநிலையத்துறை நிர்வாகத்துக்குள்ளான கோயில்கள்தான்- கோயில்கள். அரசு நடத்தும் பள்ளிக்கூடங்கள்தான் - பள்ளிகள் என்கிற இலக்கணம் எம்ஜிஆர் காலத்தில் பின்பற்றப்பட்டது. 1989 ல் கலைஞர் ஆட்சியில் தான் இந்த விசித்திர நடைமுறை நீக்கப்பட்டது. 17-02-1989 சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர் இது பற்றிய அறிவிப்பை செய்தார்.
இந்த வரலாற்று செய்திகளை எல்லாம் தெரியாமல் கலைஞர் மீதான அவதூறுப் பிரச்சாரம் செய்வது கடைந்தெடுத்த கயமைத்தனம்.
1996- 2001 மற்றும் 2006-2011 திமுக ஆட்சிகாலத்தில் மதுவிலக்கு அமுலில் இல்லாவிட்டாலும் நிலைமைகள் கட்டுக்குள் இருந்தது.
டாஸ்மாக் அரசு நிறுவனம் மூலம் மதுபான சில்லறை வியாபாரம் தொடங்கியது ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில்தான். அட்டேச்டு பார், டிலைட் பார், இரவு 12 மணிவரை கடை எல்லா கண்றாவியும் இந்த புண்ணியவதி ஆட்சியிலதான் வந்தது. பள்ளி கோயில் பேருந்து நிலையம் அருகில் எல்லாம் கடைபோட்டது இந்த அம்மையார் ஆட்சியிலதான்.
கலைஞர் ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கோயில்கள் இருக்கும் இடங்களில் மதுபான கடைகள் இல்லாமல் இருக்கும். சென்றமுறை சுமார் 1300 பார்கள் 132 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இரவு 10 மணிவரைதான டாஸ்மாக் கடை திறந்திருக்க வேண்டும் என்று உத்தரவு போட்டவரும் கலைஞர்தான். இனி புதிய கடைகள் திறக்க மாட்டோம் என்றும் அறிவித்தவர் கலைஞர்.
ஆகவே தலைவர் கலைஞர் தற்போது அறித்தபடி மதுவிலக்கு திட்டம் தமிழகத்தில் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டுமானால் திமுக அடுத்த தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும்.
அறிவும் நாணயமும் உள்ள யாரானாலும் இந்த விஷயத்தில் கலைஞர் மீது வீண்பழி சுமத்தாமல் அவருக்கு ஆதரவு தருவார்கள்.
No comments:
Post a Comment