தீபாவளிப் பண்டிகை திராவிடத் தமிழர் கொண்டாடலாமா? வாழ்த்துகள் பரிமாறிக் கொள்ளலாமா? உண்மை திராவிட இயக்கத் தலைவர்கள் தீபாவளி வாழ்த்துச் செய்தி சொல்வது இல்லையே ஏன்? திராவிட இயக்க அரசியல் கட்சியில் இருக்கும் தொண்டர்கள் தோழர்கள் வாழ்த்துச் செய்திகள் சமூக ஊடகங்கள் மூலமாக தெரிவிப்பது சரிதானா? அப்படி தெரிவிப்பவர்களை விமரிசனம் செய்வதும் அவர்கள் பெரும்பிழை இழைத்ததைப்போல் விவாதம் செய்வதும் ஏற்புடையதா? இந்த கேள்விகளுக்கு விடைகாண வேண்டியத் தேவை இப்போது எப்போதும் இல்லாத நிலைக்கு உருவாகி இருப்பதாக உணர்கிறேன்.
தமிழர்களுக்கான விழா தீபாவளி அல்ல என்பது வரலாற்று அடிப்படையில் உறுதி ஆன விசயம். தமிழ் ஆய்ந்த அறிஞர்கள் ஆய்வாளர்கள் இதனை ஏற்றனர். தமிழர் தன்மானத்தை தட்டி எழுப்பி அவர்களுக்கு சமுதாய அரசியல் விழிப்புணர்வை உருவாக்கிய இயக்கம் திராவிடர் இயக்கம். அந்த அடிப்படையில் தீபாவளியை எதிர்த்தனர்.
தீபாவளியைக் கொண்டாடுபவர்கள் ஏமாளிகள் என்பதாக பரப்புரை செய்தனர். இந்துமத புராண புளுகுக் கதைகளை சொல்லி அதன் ஆழ்ந்த அர்த்தங்களை விளக்கினர். தமிழர்களுக்கு அந்த கதைகள் எப்படி அன்னியமானவை என்பதைச் சொல்லும்போது அதில் உள்ள ஆபாசம் அசிங்கம் சூழ்ச்சி சதி இவைகளை எடுத்துக்காட்ட வேண்டி இருக்கிறது.
தமிழ் இலக்கியத்தில் இந்த ஆபாச புளுகு புராண கதைகள் எப்படி எல்லாம் எத்தகைய மாற்றங்களுடன் நுழைக்கப்பட்டது என்பதை விளக்க வேண்டியதாகிறது.
அறிஞர் அண்ணா அவர்கள் கம்பராமாயணமும் பெரியபுராணமும் தீயிட்டுப் பொசுக்க வேண்டிய நச்சுமரங்கள் என்று வாதாடினார். அதன் மீது தீப்பரவட்டும் என்றார். நீதிதேவன் மயக்கம் என்று நாடகம் எழுதி நடித்தார். அதன் இறுதி காட்சியில் வால்மீகியின் ராமாயணத்தை தமிழ்படுத்தி கம்பர் கால் தவறி விழுந்தார் என்பதை ’சிம்பாலிக்’காக காட்சி அமைத்தார்.
ஆனாலும் அவரே தன் ஆட்சிக்காலத்தில் கம்பருக்கு கடற்கரையில் சிலை வைத்தார். தமிழையும் புகழ்ப்பெற்ற தமிழர்களையும் மதிக்கும் பண்பு அவரிடம் இருந்தது. கம்பனின் அவதாரபுருசன் இராமனுக்கு சிலை வைக்கவில்லை. இருந்த ராமன் சிலைகளுக்கு செறுப்புமாலையும் போடவில்லை.. இதுதான் அண்ணன் காட்டிய வழி.
அவரை உருவாக்கிய அவருடைய ஆசான் தந்தை பெரியார் சண்டமாருதம்.. புயல் போன்றவர் புரட்டிப்போட்டு புத்துலகம் காண விரும்பிய புரட்சிக்காரர். அண்ணா தென்றலைப் போன்றவர். இதமாக சொல்லி பதமாக மக்கள் மனதை மாற்றி சமத்துவத்தையும் சமதர்மத்தையும் காண முடியும் என்று நம்பியவர்.
இவர்கள் இருவருக்கும் இடையிலான நுட்பமான இந்த வேறுபாட்டை உணர்ந்தவர்கள் தொடக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகளை சுலபமாக புரிந்து கொள்ளமுடியும்.
தீபாவளி - கிருஷ்ண பகவானால் நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாள். அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதாக தென்னாட்டில் மட்டுமே சொல்லப்படும் கதை.
இராவணனை போரில் வென்று அய்யோத்தி நகரம் திரும்பும் நாளில் அய்யோத்தி மக்கள் அன்று அம்மாவாசை நாளானதால் தீபங்கள் ஏற்றி அவரை வரவேற்றதாக வடநாட்டில் சொல்லப்படும் கதை.
ஜெயின் சமூகத்தை சார்ந்தவர்கள் அவர்களுடைய 24 வது தீர்த்தங்கரர் மகாவீரர் முக்தி என்னும் நிர்வாண நிலையை அடைந்ததை தீபம் ஏற்றி வழிபடும் நாளாக தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
தீபாவளி என்றால் தீப ஆவளி என்று பதம் பிரித்து தீபங்களின் வரிசை என்று பொருள் சொல்வர். ஆனால் தமிழ் நாட்டில் தீபாவளி அன்று அப்படி தீபவரிசை ஏற்றி வைப்பது இல்லை. ஆனால் வடநாட்டில் தீப வரிசை வைத்து கொண்டாடுவர். தீவாலி என்று சொல்வார்கள்
இதுவே தீபாவளி தமிழர் பண்டிகை அல்ல என்பதை உறுதி செய்யும்
ஆனல் இன்றைக்கு தீபஒளித் திருநாள் என்று தமிழ்படுத்திக் கொண்டாட ஆரம்பித்து இருக்கிறோம். கொண்டாட்டங்கள் மக்கள் வாழ்க்கையின் அங்கமாகிப் போனது. தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்த நிலையில் பண்டிகைகளின் தாத்பர்யம் தத்துவம் அதன் உட்கருத்து என்ன என்பதை யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
கதைகட்டுவதில் கைதேர்ந்தவர்கள் ஆரியர். அவர்களை எதிர்த்தவர்களை சதியாலும் சூழ்ச்சியாலும் வீழ்த்தி அரக்கர் என்றும் அசுரர் என்றும் பெயர் கொடுத்து அவர்களை அவரது சொந்தங்களே வெறுக்கும்படி செய்து வெற்றிகண்டனர்.
ஆதிதமிழன் அசுரர் குலத்தலைவர்களில் ஒருவனான நரகாசுரனின் மரணநாள் தீபாவளி. வீரவணக்கம் செலுத்தும் நாளாக அதனைக் கருதலாம். தென்னாட்டில் குறிப்பாக தமிழகத்தில் பார்ப்பனரல்லாதவர் உறவினர் சாவுக்கு தலைகுளித்து புதுத்துணி உடுத்துவதை சடங்காக பின்பற்றுவதைப் போன்றே தீபாவளியன்றும் செய்கின்றனர்.
தமிழர் தம் வீரமரபில் தம் முன்னோர்களுக்கு ஊணுனவு வைத்துப் படையல் இடுவதைப் போன்று இன்றும் தீபாவளி அன்று புலால் உணவும் புத்தாடையும் வைத்து அந்த வீரகுல திலகமான நரகாசுரனை நினைவில் போற்றுவதாகவே நாம் தீபாவளியை எடுத்துக் கொள்ளலாம்.
பகுத்தறிவுச் சிந்தனையில் தீபாவளிக்கான புராண புளுகுக் கதைகளைப் புறம்தள்ளி நம் இன அரசனை சூதுமதியால் வென்ற சூழ்ச்சிக்காரர்களை அடையாளம் காணும் நாளாக தீபாவளியை கொண்டாடுவது நல்லதே.
ஆனால் அன்று வாழ்த்து.சொல்வதை தவிர்க்க வேண்டும். அதற்கான காரணங்களை சொல்ல வாய்ப்பு கிடைக்கும். வாழ்ந்து மறைந்த வீரமறவனின் நினைவுதினமாக அந்நாளை அவரவருக்குப் பிடித்த விதமாக கொண்டாடிக் கொண்டு போகட்டும்.
இன்று எனக்கு வாழ்த்து சொன்னவர்களுக்கு எல்லாம் இனிமேல் யாருக்கும் வாழ்த்து சொல்லாதீர்கள்.. இன்றைய நாள் ஒரு மாவீரனின் மரணநாள். அவன் நம்மவன் அவனுக்கு வீர வணக்கம் செலுத்துவோம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்
சிலர் பண்டிகைகள் சிறு வியபாரிகளுக்கு நன்மை விளைவிப்பதால்தான் கொண்டாடுவதாக பெருமைப்பட்டுக் கொள்வார்கள். இது ஒரு போலித்தனம். உண்மையில் இப்போது பல்வேறு அறிவுசார்ந்த விழாக்கள் சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் கொண்டாடப்படுகின்றன. அவற்றை மதப்பண்டிகைகளுக்கு மாற்றாக முன்னிறுத்தினால் நல்லது.
விடுமுறை புத்தாடை பலகாரம் பட்டாசு என்பதான கவர்ச்சியான அம்சங்கள் நிறைந்த தீபாவளியை எளிதில் மக்களிடம் இருந்து விலக்குவது கடினம். ஆதலால் அதைப்பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் பரப்பிடும் விதமாக தீபாவளியை பயன்படுத்துவோம். அதுதான் சிறந்தது. ஆதரவு எதிர்ப்பு என்ற நிலைமாறி தந்தை பெரியார் சொன்னது போல் பகுத்தறிவுடன் அணுகி இந்நாளை கொண்டாடுவோம்.
சங்கராந்திப் பண்டிகை பொங்கல் திருநாள் ஆனது போல் தீபாவளிப் பண்டிகை தீபஒளித் திருநாள் ஆகட்டும். பகுத்தறிவு தீபம் பட்டொளி பரப்பட்டும்.
No comments:
Post a Comment