Monday, December 21, 2015

தீர்கதரிசி - கப்பல் வருகை (1)

தீர்கதரிசி
கலீல் ஜிப்ரான் 

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்ப்பு 
அருள் பேரொளி 


அல்முஸ்தபா,
தேர்ந்த அன்பிற்குரியவர்
ஆர்பலேஸ் நகரில் ஓர் நாள் விடியற் காலையில்
அவருடைய கப்பல் அவரை சுமந்து சென்று
அவரது பிறப்பிடத் தீவிற்கு மீண்டும் கொண்டு சேர்க்கும் என்று
ஆண்டுகள் பனிரெண்டாக காத்துக் கொண்டு இருந்தார்.

பன்னிரண்டாம் ஆண்டில்,
அறுவடை மாதமான  லெலூல் ஏழாம் நாளன்று
 நகரச் சுவர்கள் இல்லாத மலைமீது ஏறி
தனது கப்பல் மூடுபனியின் ஊடே வருமா என்று
கடல்பக்கம் பார்த்துக் கொண்டு இருந்தார்.
.
பின்னர்
அவரது இதய வாயிற்கதவுகள் வேகமாக திறந்து கொண்டன.
அவரது மகிழ்ச்சி கடலின் தொலைவில் பறந்து சென்றது.
உயிர்மையின் அமைதியில் அவர் தன் கண்களை மூடி வழிபட்டார்.

அவர் மலையை விட்டு இறங்கும் போது
மனக்கவலை அவரைப் பற்றிக் கொண்டது.
அவர் இதயம் இப்படி எல்லாம் எண்ணியது:

உயிர்வேதனை இல்லாமல் கவலை இல்லாமல்
இந்த ஊரை விட்டு
அமைதியுடன் எப்படி நான் போவேன்?
இந்த நகரின் சுவற்றுக்குள்
வெகுநாட்கள் வலியோடு கழித்திருக்கிறேன்.
நீண்ட தனிமைஇரவுகள் ஏராளம் இருந்தன;  
இந்த தனிமையையும் வலியையும்
வருத்தமில்லாமல் விட்டுப் புறப்பட யாரால் முடியும்?


இந்த தெருக்களில்
என்னுயிரின் எண்ணற்றத் துண்டுகளைச்
சிதறி இருக்கிறேன்.
இந்த மலைகளுக்கிடையே
என் ஆசைக் குழந்தைகள் எத்தனையோ
அம்மணமாக உலவியிருக்கின்றன.
சுமையும் வலியும் இல்லாமல்
என்னால் அவர்களிடமிருந்து விலக முடியாது.
இன்று என் கைகளே கிழித்து போடுவது
என் உடுப்பு அல்ல என் உடல்தோல்”.

இங்கே எனக்குப் பின்னால் விட்டுச் செல்வது
என் எண்ணங்களை மட்டுமல்ல
பசியும் தாகமும் கொண்ட
ஒரு இதயத்தின் இனிமையையும்தான்.”

இன்னும் என்னால் இங்கு சஞ்சரிக்க இயலாது.
கடல் என்னை அழைக்கிறது
நான் புறப்பட வேண்டும்.
இரவில் எரிந்த நாழிகைகள் உறைந்து
படிகக்கற்களாக வடிவெடுத்தாலும் நான் இருக்க முடியாது.
என்னோடு இங்கிருக்கும் உவகையை எடுத்துப் போவேன்.”

ஆனால் அது எப்படி முடியும் என்னால்?
தனக்குச் சிறகுகள் கொடுத்த
நாவையும் உதடுகளையும் சுமந்து பறக்க
குரலால் முடியாது.

சூரியனின் குறுக்கே பருந்து ஒன்று 
கூட்டை விட்டு தனியாகப் பறப்பது போல்
அகண்டவெளியில் தனியாகத்தான் தேட வேண்டும்.

அவர் இப்போது மலையடிவாரம் போய்
கடலை பார்த்த போது அவருடைய சொந்த நாட்டினர்
மாலுமிகளாக முன்தளத்தில் இருப்பதையும்
துறைமுகம் நோக்கி அவருடைய கப்பல் வருவதையும் பார்த்தார்.

அவர்களை நோக்கி அவருடைய உயிர் உரத்து குரல் எழுப்பியது.
அவர் சொன்னார்:
என் ஆதித்தாயின் மைந்தர்களே,
திரைக்கடலோடிகளே,
என் கனவில் எத்தனையோ முறை கடற்பயணம் செய்தீர்.
நீண்ட என் கனவை இன்று நனவாக்க வருகிறீர்.”

புறப்பட ஆயத்தமான என் ஆர்வத்துடன்
காற்றுக்கு ஏற்றால் போல் பாய்மரங்கள் கட்டப்பட்டுள்ளன.
அமைதியான காற்றுவெளியில்
இன்னொரு மூச்சுக்காற்றை சுவாசித்து
இன்னொரு அன்பான பார்வையை பின்னோக்கி பதியச் செய்வேன்.
அதன் பிறகு கடற்பயணிகளில் கடற்பயணியாக உங்களோடு நிற்பேன்.”

ஆறுகளுக்கும் ஓடைகளுக்கும்
விடுதலையும் அமைதியையும் தரும் பரந்த கடலே
நீ தூக்கமில்லாத தாய்.
ஓடையாகிய நான்
இன்னொரு சுற்று சுற்றி
மீண்டும் காடுகளுக்கு இடையே
முணுமுணுத்துக் கொண்டே
எல்லையற்ற கடலில் அளவற்றத் துளியாக
உன்னிடம் வருவேன்.”

நகர வாயிலை நோக்கி ஆண்களும் பெண்களும்
வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் விட்டு
தொலைதூரத்தில் வருவதை அவர் நடந்துகொண்டே பார்த்தார்.
அவரைப் பெயரிட்டு அவர்கள் அழைப்பதையும்
அவருடைய கப்பல் வருகையை
வயலுக்கு வயல் ஒருவருக்கு ஒருவர்
உரத்தக்குரலில் தெரிவிப்பதையும் கேட்டார்.

அவருக்குள்ளாகவே சொல்லிக் கொண்டார்:
விட்டுப்பிரியும் இந்நாள் கூட்டும் நாளும் ஆகுமோ?
என் விடியலின் முந்தையநாள் இதுவென சொல்லப்படுமோ?”

உழுது கொண்டிருந்த போது கலப்பையையும்
பழச்சாறு பிழியும் போது சக்கரத்தையும் விட்டு
ஓடி வந்தவருக்கு நான் என்ன கைமாறு செய்வேன்?
அவர்களுக்கு பறித்துக் கொடுக்க
என் இதயம் பழங்கள் பழுத்துத் தொங்கும் மரமாகக் கூடாதா?
அவர்களுடைய குவளைகளை நிரப்பும் நீரூற்றாக என் ஆசை பாய்ந்தோடாதா? நான் என்ன வல்லவன் கைகள் வருடும் யாழின் நரம்பா ? - அல்லது
அவருடைய மூச்சுக்காற்று என்னுள்ளே நுழைந்துவர புல்லாங்குழலா ?”

அமைதியில் நாட்டமுடைய நான்
தன்னம்பிகையுடன் தருவதற்கு
என்ன புதையலை என் அமைதியில் நான் கண்டெடுத்தேன்?

என் அறுவடை நாள் இதுதான் என்றால்
என் நினைவில் நிற்காத பருவக்காலத்தில்
எந்த நிலத்தில் என்ன விதைகளைத் தூவினேன்?

இதுதான் தக்கசமயம் என்றால்
நான் தூக்கிக் காட்டும் விளக்கில் எரியும் நெருப்பை
ஏற்றியது நான் அல்லவே.
இரவுக் காவலன் நெய் ஊற்றி ஒளி ஏற்றி வைப்பான் என்று
இருட்டில் வெறும் விளக்கைதானே ஏந்தினேன்

இவைகள் அவர் வார்த்தையில் வடித்தவை.
ஆனால் அவர் இதயத்தில் சொல்லப்படாமல்
விடுபட்டவை நிறைய இருந்தன.
அவரது ஆழ்மன இரகசியத்தை
அவரால் பேச இயலாமல் போனது..
அவர் நகரத்தில் நுழைந்ததும்
எல்லா மக்களும் அவரை சந்திக்க சூழ்ந்து கொண்டு
ஒரே குரலில் அவரிடம் அலறினார்கள்.

அந்த ஊர்ப்பெரியவர்கள் முன்வந்து சொன்னார்கள்:
:“எங்களைவிட்டுப் பிரியாதீர்.
எங்களின் அந்திக்கருக்கலில் நண்பகல் வெளிச்சமாக.
உங்கள் இளமை துலங்கியது
எங்கள் கனவுகளுக்கு கனவாக விளங்கினீர்.
நீங்கள் எங்களின் அயலவரும் அல்ல
விருந்தினரும் அல்ல. - ஆனாலும்
எங்களுடைய நெருங்கிய அன்புடைய மகன் ஆவீர்.
உங்கள் முகம் காண ஏங்கும்படி
எம் கண்களை வருத்தமடைய செய்யாதீர்.”

பாதிரிமார்கள் அவரிடம் கூறினார்கள்:
கடலின் அலைகள் நம்மை பிரிக்காதிருக்கட்டும்.
எங்களுடன் நீங்கள் கழித்த ஆண்டுகள் நினைவுக்கு வருகின்றன.
உயிர்க்காற்றாய் எங்களிடையே உலவினீர்கள்.
உங்களின் நிழல் எங்கள் முகத்தில் வெளிச்சம் தந்தது.”

உங்களை மிகவும் நேசித்தோம்.
ஆனால் அந்த நேசத்திற்கு வார்த்தைகள் இல்லை.
அது முக்காடிட்ட முக்காடாக இருந்தது.
இருந்தும் இப்போது திறந்த நிலையில் எதிரே நின்று
உம்மை நோக்கி உரக்க ஒலிக்கிறது.
பிரியும் நேரம் வரும் வரையில்
பிரியத்தின் ஆழம் என்னதென்று தெரியாதிருந்தது.”

மேலும் பலர் வந்தார்கள். வேண்டிக் கொண்டார்கள்..
ஆனாலும் யாருக்கும் அவர் பதில் அளித்தார் இல்லை.
அவர் தலை கவிழ்த்த போது
கண்ணீர் துளிகள் அவர் மார்பில் விழுந்ததை
அருகில் இருந்தோர் கவனித்தனர்.


கோயில் எதிரில் இருந்த பெரிய சதுக்கத்தை நோக்கி
அவரும் அந்த மக்களும் சென்றார்கள்.
அங்கே இருந்த சரணாலயத்திலிருந்து
குறிசொல்லும் ஆல்மித்ரா என்னும் பெயருடைய
பெண்மணி வந்தார்.
அந்த நகருக்கு வந்த நாளில் முதல் முதலாக
அவரை நாடிச் சென்று அவர் மீது நம்பிக்கை வைத்தவர்

அந்த பெண்மணியை மிக்க நெகிழ்வுடன் பார்த்தார்.
அந்த அம்மை அவரை இப்படி புகழ்ந்தார்:

கடவுளின் தூதுவரே,
உங்களுக்கு மிகுந்த நாட்டமான
உங்கள் கப்பலை, நீண்ட தொலைவில் தேடினீர்.
இப்போது அந்த கப்பல் வந்து விட்டது
நீங்கள் போக வேண்டும்.
உங்கள் நினைவில் வாழும் நிலத்தின் மீதான ஏக்கமும்
உங்கள் வாழ்விடத்தின் மீதான ஆசையும் ஆழமானது. - ஆதலால்
உங்களை எங்கள் அன்பு கட்டிப் போடவோ
எங்கள் தேவைகள் தடுத்து நிறுத்தவோ செய்யாது.”

  ஆயினும் எங்களை விட்டுப் பிரியும் முன்பு 
நாங்கள் கேட்பதைப் பற்றிய உண்மைகளை
எங்களுக்கு விளக்கவும். 
நாங்கள் அதை எங்கள் பிள்ளைளுக்குக் கொடுப்போம்
அவர்கள் அவர்களுடைய பிள்ளைகளுக்குக் கொடுப்பார்கள்
இப்படியே அதை அழியாமல் காப்போம்”.  
உங்கள் தனிமையில் எங்கள் நாட்களை கவனித்தீர்.
நீங்கள் விழித்திருக்கும் போது
எங்கள் உறக்கத்தின் அழுகையும் சிரிப்பையும் கேட்டீர்”.


 ஆகவே
நீங்கள் அறிந்தவரை பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான
எல்லாவற்றையும் இப்போது வெளிப்படுத்திச் சொல்லுங்கள்.”

அதற்கு அவர் கேட்டார்:
ஆர்பலேஸ் மக்களே,
உங்கள் நெஞ்சங்களில்
நிலைகொள்ளாமல் நிறைந்திருக்கும்
எதைப் பற்றி நான் பேசுவது”?

No comments: