Tuesday, November 8, 2022

வள்ளலார் இயற்றிய - குடும்ப கோரம் - வாழ்வியல் தத்துவ விளக்கம்

 

வள்ளலார் இயற்றிய - குடும்ப கோரம் - வாழ்வியல் தத்துவ விளக்கம்

 

திரு அருட்பிரகாச வள்ளலார் வாய்மொழியாம் திருஅருட்பா பதிப்புகளில் பிற்சேர்க்கைப் பகுதியில் உள்ள குடும்ப கோரம் என்னும் தலைப்பிலான செய்யுள் நிலைமண்டில ஆசிரியப்பா என்னும் இலக்கண வரம்பில் புனையப்பட்டது. இது ஒரு கடிதம் ஆகும். வள்ளலார் சென்னையில் வாழ்ந்த காலத்தில் அவருடன் அன்பு கொண்டு பழகிய திருமழிசை வைத்தியலிங்கம் என்னும் அன்பருடைய மகன் முத்துசாமி என்பவர் திருஅருட்பா அச்சில் ஏறும் முன்பே வள்ளலாரின் பாடல்களை மனனம் செய்து பாடி மக்களிடம் பரப்பிய பெருமகன். அவரைப் பாராட்டி வள்ளலார் சாற்றுக் கவி பாடி புகழ்ந்து இருக்கிறார். முத்துசாமி அவர்கள் எழுதிய சிவபெருமான் மீதான தோத்திரப்பாடல்களப் படித்துவிட்டு வள்ளலார் எழுதிய அந்த சாற்றுக்கவி:

ஒருவகைப் பொருள்தெரித் துயவுதீர்
    மறைகள் நான்கொன்றி வாழ்க!
உயரரன் தரும்ஏழு நான்கதாம்
    ஆகமம் உலகின் மல்க!
இருவகைப் பவம்ஒழித் திலகும்வெண்
    ணீற்றினம் எங்கும் ஓங்க!
இணையில்நல் அறமுன்ஆம் பயன்ஒரு
    நான்கும் ஈடேறி வெல்க!
பொருவலற் றரையர்எத் திசையுளும்
    நீதியால் பொலிக!யாரும்
புகழ்சிவாத் துவிதசித் தாந்தமெய்ச்
   சரணர்எண் புல்க! நாளும்
திருவருட் பனுவல்சொற் றிடும்அவர்க்
   கெண்திரு சேர்க! வாதைச்
செப்பு முத்துச்சுவா மிக்கவிக்
   குரிசில்சீர் செழிக மாதோ.

 

பின்னாளில் வள்ளலார் சென்னையைவிட்டு வடலூர் சென்று வாழ்ந்த காலத்தில் சென்னையில் நடைபெற்ற முத்துசாமி அவர்களின் திருமணத்திற்கு செல்லாமல் தவிர்த்தார். அதனால் மனம் வருத்தமுற்ற முத்துசாமி அவர்களுக்கு தாம் வர இயலாதக்  காரணத்தை விளக்கி எழுதியதே குடும்ப கோரம் என்னும் நீண்ட செய்யுள் வடிவிலான கடிதம்.

 

இக் கடிதத்தை முத்துசாமி அவர்களிடம்  கொண்டு சென்றவர் கொந்தமூர் வரதாசாரியார் என்பவர். முத்துசாமி இவ்வகவலை மனப்பாடஞ் செய்து வைத்திருந்தார். மனப்பாடமாக அவர் சொல்லக் கேட்டு அதனை மோசூர் கந்தசாமி அவர்கள் எழுதி வைத்தார். அது அட்டாவதானம் பூவை. கலியாணசுந்தரனார்  பார்வையிடப் பெற்று, காஞ்சி நாகலிங்கனார் நடத்தி வந்த தொழிற்கல்வி இதழில் 1914 ஜூலை(ஆனந்த, ஆடி தொகுதி 1, பகுதி 4) ஒரு பாதியும். ஆகஸ்டு (ஆவணி, தொகுதி 1, பகுதி 5) இதழில் மறுபாதியுமாக வெளிவந்திருக்கிறது. அதன் பிறகு ஆனந்தவிகடன் 20-02-1929 நாளிட்ட வருட அனுபந்தம் என்னும் ஆண்டு மலரில் வெளியானது. (இணைப்பில் காண்க)


குடும்பகோரத்தில் வள்ளலார் தத்துவக் குடும்பத்தின் சேட்டை செயல்பாடுகளை  அழகாக ஒவ்வொன்றையும் உருவாக்கப்படுத்தி விளக்குகிறார்.

 

ஒரு குடும்பத்தலைவன் ஆணவம் மாயை கன்மம்  என்னும் மூன்று மனைவிகள் கட்டி,  முதல் மனைவியான ஆணவத்திற்கு அஞ்ஞானம் என்ற மகனும், இரண்டாம் மனைவியாகிய மாயைக்கு  மனம்,  புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு பிள்ளைகளைப் பெற்று;
மூன்றாம் மனைவியாகிய கன்மத்திற்கு சத்துவம், இராசசம், தாமசம் என்ற மூன்று பிள்ளைகளை ஈன்று; மூன்று மனைவியரோடும், எட்டுப்பிள்ளைகளோடும் ஏழ்மைநிலையில்  அவன் வாழ்வதோ வாடகை வீட்டில். வாடகை வீடோ, வாதம், பித்தம்,  சிலேத்துமம் என்னும் மூவர்க்குச் சொந்தமானது .

வீட்டு வாடகையும் மாதவாடகையன்று, நாள் வாடகை. வீட்டுக்காரர்கள் மூவரும் அன்றைக்கன்றே வாடகையை வசூலிக்கின்றனர். (வீடு - உடம்பு, வாடகை - உணவு).

இவ்வாறு துன்புறும் குடும்பத்தலைவனுக்கு எத்தனையோ வெளி விவகாரம்; உள்விவகாரம்.

வேதாந்தம் பேச வருவோர்,சித்தாந்தம் பேச வருவோர், இதிகாசம் கூற வருவோர், இலக்கணம் இயம்ப வருவோர், மத தூஷணம் செய்ய வருவோர், விவகாரம் பேச வருவோர், வீண் கதை பேச வருவோர், இப்படி எத்தனையோ வெளிவிவகாரங்கள்.

மலங்கழித்தல், பல்துலக்குதல், ஆடை துவைத்தல், நீராடல், சிவசின்னமணிதல், பூசனை, யோகம் என எத்தனையோ உள்விவகாரங்கள்.

இத்தனை விவகாரங்களுக்கும் பகற் பொழுது சரியாய்ப் போகிறது. இரவு வந்ததும்  பரத்தை வீட்டுக்குச் செல்ல வேண்டும், பரத்தை யார்? நித்திரை. "நித்திரைப் பரத்தையை நேர்ந்து கூடவும் பொழுதுஞ் சரியாய்ப் போகின்றதுவே" என்று வள்ளலார் விவரிக்கும்  குடும்ப கோரம் படிக்கப்படிக்க சிந்தனையைக் கிளரும் சீரியாக கருத்துப் பெட்டகம் ஆகும்.

 

குடும்பகோரத்திற்கு மாறான குடும்ப குதூகலம் எப்படி இருக்கும் என்பதையும் வேறு ஒரு பாடலில் வள்ளலார் தெரிவித்து இருப்பார், அப்பாடல்:

 

நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு
       நிகழ்சாந்த மாம்புதல்வனும்
நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்
       நீக்கும்அறி வாம்துணைவனும்
மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
       மனம்என்னும் நல்ஏவலும்
வருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று
       வாழ்கின்ற வாழ்வருளுவாய்
அலைஇலாச் சிவஞான வாரியே ஆனந்த
       அமுதமே குமுதமலர்வாய்
அணிகொள்பொற் கொடிபசுங் கொடிஇரு புறம்படர்ந்
       தழகுபெற வருபொன்மலையே
தலைவர்புகழ் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
      தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
      சண்முகத் தெய்வமணியே.

 

கவிநயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் குடும்பகோரம் என்னும் செய்யுள் வடிவ கடிதம் தத்துவ விளக்கத்தை



மிக எளிதாகவும் நகைச்சுவையாகவும் எடுத்துக் காட்டுகிறது.

 

உலகியற் குடும்பத்தின் கோரங்களைத் தன்மீது சுமத்திக் கூறி இத்தடைகளால் திருமணத்திற்கு வரவில்லை என முத்துசாமி அவர்களுக்கு இக்குடும்ப கோரத்தை வரைந்து அனுப்பியிருக்கிறார். இனிய இலக்கிய விருந்து. அள்ளிப்பருகுவோம் வாரீர்.

 

குடும்ப கோரம்


திருவளர் கமலக் குருமலர் தவிசினன்
முதற்பெருந் தேவர் மூவரும் பணியப்
பொதுவிடைத் திருநடம் புரியுநம் பெருமான்
அடிமலர்க் கன்புசெய் அன்பர்கட் கன்பன்
சீர்விளை தூய்மை நீர்விளை யாடிச்
சொற்றரு வாய்மைப் பொற்றுகில் உடுத்துக்
கரிசில்வெண் ணீற்றுக் கவசந் தரித்துத்
தத்துவ சிற்பர சற்குண அகண்ட
அற்புத சிற்குண அங்கலிங் கேசனை

அகத்தும் புறத்தும் அருச்சனை புரிந்து
சிவந்தரு சுகமெனும் திருவமு துண்டு
சீலம் எனும்தாம் பூலந் தரித்தே
அளவில் இன்பம் அனுபவிக் கின்றவன்
மூதறி வாளன் முத்து சாமிஎன் றியற்பெய
ருடையஇத் திருவா ளனுக்கு
இராம லிங்கம் எழுதி விடுத்த
மயலுறு சோபன வாசகம் ஆவது
ஐயநின் புடைஇப் பொய்யனேன் போதர
தடைபல உளஅவை சாற்றிட என்றால்

ஆயிரங் கோடிநா வாயினும் முடியா
இருந்து மற்றவை எண்ணிட என்றால்
உள்ளம் உடம்பெலாம் கொள்ளினும் போதா
எழுதஎன் றாலும் ஏட்டுக் கடங்கா
என்னினும் சிறிதே எழுதத் துணிந்தனன்
என்னெனில் யான்ஓர் ஏழை என்பதும்
தெளிவிலாச் சிறியரில் சிறியனேன் என்பதும்

(முதல் மனைவி : ஆணவம்)

இன்புடை அறிவே இல்லை என்பதும்
அன்புடை யாய்நீ அறியாத தன்றே
செம்பொடு களிம்பு செறிந்தது போன்றோர்

 


ஆணவக் கிழத்தி”
 அநாதியில் இறுகப்
பிரமரா க்ஷசிபோற் பிடித்துக் கொண்டனள்
சிவபூ ரணத்தைச் சிறிதும் காட்டாள்
ஜெகமெனும் ஏக தேசமும் தெரிக்காள்
எவ்விடத் திருளும் என்அகச் சுவரெனக்
கனஇருள் வடிவம் காட்டும் கொடியாள்
இரவிது பகல்இது இன்பிது துன்பிது
ஒளிவெளி இதுவென ஒன்றும் தெரிக்காள்
இறுக்கும் அரக்கி இவளொடும் இருந்தே
எளியேன் முயங்கிடல் என்தவம் என்கோ

 

(ஆணவம் பெற்ற பிள்ளை: அஞ்ஞானம்  )

முற்றும்
 அஞ்ஞான மூடப் பிள்ளை
ஒருவன் பிறந்தனன் ஒடிவான் அவன்தனால்
பானுவின் ஒளியைப் படரிருள் மூடல்போல்
என்அகக் கண்ணையும் என்புறக் கண்ணையும்
அங்கையால் மூடி அலக்கழிப் பான்எனைத்
தன்னைஇன் னான்எனத் தானும் காட்டான்
என்னைஇன் னான்என எண்ணவும் ஒட்டான்
ஏடுறும் எண்ணும் எழுத்தும் உணரான்
தாயினும் கொடியன் ஆயினும் என்தன்
விதியை நொந்து விருப்பின் வளர்த்தேன்

இவன்தன் வாழ்க்கையும் வாழ்க்கையோ என்ன
மதிப்பவர் ஆரெனை வையகம் மகிழ்ந்தே
வையக மகிழ்ச்சி வையகம் நெருப்பாம்
மருளுறு சிறுவன் வளர்நாள் தொடுத்தே
உறவகன் றார்யான் அறிவகன் றிட்டேன்

 

(இரண்டாம் மணவினைக் கர்த்தாவாக்கிய பசுபதி)

செப்புறும் தெய்வச் செயலென் கேனோ
இருதொ டக்குகள் இயலா தென்றே
தொடக்குப் பற்பல அடுக்கடுக் காயின
ஆரோ பசுபதி அவன்வடி வழலாம்
அங்கண் மூன்றாம் அருட்சத்தி மானாம்

மண்ணும் விண்ணும் மாலய னோரால்
நேடியுங் காணா நீள்பத முடியனாம்
எழுமலை எழுகடல் எழுபுவி எழுகார்
ஆன எவையும் அளித்துநோக் குவனாம்
ஊர்தரும் மாருதம் உயிர்ப்பாய் உளனாம்
உயிரெழு வகுப்பையும் ஊட்டியுறக் குவனாம்
ஊழிகள் தோறும் உள்ள ஒருவனாம்
உரைகொண் டோ தரும் உயர்வே தாகமம்
உற்ற கலைகள் உயரிய நிலைகள்
அண்ட பிண்டம் அவற்றின் துறைகள்

சாரும் இறைகள் சராச ரங்கள்
வளமுறு வர்ணா சிரம வகைகள்
வகுக்குறு வகுப்பினும் வதிவாழ்க் கையனாம்
சதிர்மா மாயை சத்திகள் கோடி
மன்னிய அரங்கிடை வதிபெற் றியனாம்
அவன்றான் யாரோ அறியேன் யானே
அறிதர வேண்டும் அப்பரு வத்தே

 

(இரண்டாம் மனைவி: மாயை)

மாயை என்னும் மாதினைக் கொணர்ந்தே
சிறுகருங் காக்கைக் குறுகுறுங் கழுத்தில்
கனம்பெறு பனங்காய் கட்டிய வாறெனக் 80
கட்டிப் புண்ணியங் கட்டிக் கொண்டனன்
விடுத்தெனைப் புண்ணியன் விலகலும் அவள்தான்
விண்ணவர் மண்ணவர் வியக்கும் உருக்கொடு
கொள்ளிவாய்ப் பேய்களோர் கோடி நின்றே
தடித்த குழவியைப் பிடித்தது போல
மற்றவள் என்னை மணந்து கொண்டனள்
பெண்ணடை அனைத்தும் பெருங்கதை யாகும்
அடுத்தவர் என்னை அந்தோ கொடிய
அருந்தளை ஏனென அறைந்தெனை அகன்றனர்
அகமெலாம் பகீரென அனந்த உருவாய்

அவ்வவ் வுருகொண் டணைத்துக் கெடுப்பள்
காற்றினை ஒருசிறு கரகத் தடைப்பள்
கடல்ஏ ழினையும் கடுகிடை முகப்பள்
வகைவகை யாயுடல் வனைந்து வகுப்பள்
வையக முற்றும் வாயில் மடுப்பள்
பகலிடை நள்ளிருள் இருக்கப் பண்ணுவள்
இருளில் பானுவை எவர்க்குங் காட்டுவள்
அண்டம் எல்லாம் அணுவிற் செறிப்பள்
அணுவை அண்டமாய் ஆக்கி நகைப்பள்
பொய்யை மெய்யாப் பொருந்தி மகிழ்வள்

பொருந்தும் மெய்யைப் பொய்யாச் செய்வள்
அடர்வஞ் சகக்கழங் காடற் பிரியாள்
காணாப் பன்னிலை கலையுடன் காட்டுவள்
இருளை இரிக்கும் இந்து ரவிகளைப்
படைத்திங் கியற்றுவள் பற்பல ஜாலம்
பிரமனை வலக்கைப் பிடிக்குள் அடக்குவள்
இடக்கையில் மால்பதி ஏந்தித் தரிப்பள்
தலையிடை உருத்திரன் தன்பதி தெரிப்பள்
குளிரெழு கடல்இவள் குளிக்குந் தடமே
அண்ட மெல்லாம் கொண்டையில் முடிப்பள்

ஜெகமெலாம் கலைக்குள் சேர்த்துக் கட்டுவள்
உடம்பிடை உரோமம் ஒவ்வொன் றிடையே
புவனமொன் றாகப் பொருந்தச் சமைப்பள்
எவரையும் கணத்தில் எய்தி மயக்குவள்
இக்கொடும் பாவி என்மனை யானது
பிடாரியைப் பெண்டாய்ப் பெற்றது போலும்
அனுகூ லச்சொலை அகத்திடை மதியாள்
அடிமடி பிடிப்பள் அரியவம் பிசைப்பள்
உறங்க விடாளவள் உறங்குபாய் சுருட்டாள்
மடிமாங் காயிடுங் கொடுமைக் கிளையாள்

சாகவும் விடாளவள் சார்பழி தளராள்
தவத்தில் இசையாள் பவத்தின் நசையால்
மருட்பேய் என்ன மதித்திட வாட்டிப்
படைத்தென் மானம் பறக்கச் செய்வள்
மான மகற்றியும் மனைவிட் டேகாள்
இரவும் பகலும் எனையிழுத் தணைப்பள்
இவளாற் படுமிடர் இம்மட் டிலவே
புகலப் படுமோ புகலின் இருசெவி
பொருந்துளங் கைத்திடும் போதும் போதும்
மல்லாந் துமிழின் மார்பின் மேலெனச்

சொல்லுவர் அதனால் சொல்வது மரபல

(மாயை பெற்ற பிள்ளைகளில் முதல் பிள்ளை: மனம் )

கொடுந்தவம் புரிந்தொரு குரங்குபெற் றாற்போல்
மலைக்கப் பெற்றிட
 மனம்எனும் இளைஞன்
உலக்கைக் கொழுந்தென ஒருவன் பிறந்தனன்
வருமிவன் சேட்டை வகுக்கவாய் கூசும்
விதிவிலக் கறியா மிகச்சிறிய னாயினும்
விண்மண் நடுங்க வினைகள் இயற்றிக்
காமக் குழியில் கடுகிப் படுகுழி
விழுமதக் களிறென விழுந்து திகைப்பன்
பதியை இழந்த பாவையின் செயல்போல்

கோபவெங் கனலில் குதித்து வெதும்புவன்
நிதிகவர் கள்வர் நேரும் சிறையென
உலோபச் சிறையில் உழன்று வாழ்வன்
வெற்பெனும் யானையை விழுங்கும் முதலை
முழுகிக் கடலில் முளைத்திடல் போல
மோகக் கடலில் மூழ்கி மயங்குவன்
மதுகுடித் தேங்கி மயக்குறு வார்போல்
மதத்தால் வீறி மதங்களில் வியப்பன்
பட்டினி இருக்கும் வெட்டுணி போல
மச்சரங் கொண்டு மகிழ்கூர்ந் தலைவன்

காசில் ஆசை கலங்குறா வேசை
எனினும் விழிமுனம் எதிர்ப்படில் அக்கணம்
அரிய தெய்வமென் றாடுவன் பாடுவன்
அணிகள் அணிவன் அடியும் பணிவன்
எலும்பைச் சுரண்டும் எரிநாய் போலச்
சுற்றுவன் பற்றுவன் தொழுவன் எழுவன்
கணத்தில் உலகெலாம் கண்டே இமைப்பில்
உற்ற இடத்தில் உறுவன் அம்மா
சேய்மை எல்லாம் செல்லற் கிளையான்
பித்தோங் கியஉன் மத்தனாய்த் திரிவான்

சொல்வழி நில்லான் நல்வழி செல்லான்
சேர அழைக்கில் சிரத்தே ஏறுவன்
வெட்டிலும் துணியான் கட்டிலும் குறுகான்
மலக்கி ஈன்ற மாதினும் பாவி
கள்ளது குடித்துத் துள்ளுவான் போல
மதத்தாற் பொங்கி வழிந்து துள்ளுவன்
முத்தந் தரல்போல் மூக்கைக் கடிப்பன்
மறைசொல் வான்போல் வளர்செவி கிள்ளுவன்
சற்றும் இரங்கான் தனித்துயில் கொள்ளான்
கூவிளிச் செய்வன் கூடுவன் பலரை

கூவி அதட்டினும் கோபங் கொள்வான்
இங்கு முள்ளான் அங்கு முள்ளான்
படைக்கு முன்னே பங்கு கொள்வான்
மடியில் நிறுத்தி வாய்மை வழங்கினும்
வண்ணான் கல்லிடை வறிஞர் சீலையை
ஒலித்திடல் போல உரத்திக் கத்துவன்
என்னைத் தாதையென் றெண்ணான் சொல்லும்
வாய்மை எல்லாம் வண்புனல் ஓவியம்
ஆகக் கொள்வான் அவன்பரி சுரைக்கேன்
பிறந்தஇப் பாவி இறந்தான் இலையே 180

சென்றநாள் எலாமிச் சிறுவனால் அன்றோ
வருசுகங் காணா வைச்சுமை நேர்ந்தேன்
திறந்திவன் செயலைத் தினைத்துணை விடாது
செப்பின் கற்கள் சிதைந்து கசியும்
கனத்த மரங்கள் கண்ணீர் பொழியும்
கடவுளர் இவன்செயல் காணு வாரேல்
இமையாக் கண்களை இமைத்திடு வாரால்


(மாயை பெற்ற பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளை: புத்தி)


காசிபன் மனைவிமுன் கடுந்தவம் புரிந்து
பையுடைப் பாம்பைப் பயந்தது போன்று
புத்தி என்னும் புத்திரன் தன்னை
 

ஈன்றனள் அவனோ எளியரில் எளியன்
வாய்மையும் தூய்மையும் வதிதரு வாழ்க்கையன்
தாயொடும் பழகான் தமையனோ டணையான்
தறுக ணாளரிற் குறுகியுற வாடான்
பாவம் என்னில் பதறி அயர்வான்
பாடு படற்குக் கூடான் உலகர்
கயங்கு நெறியில் உயங்கி மயங்குவன்
பாழ்நிகர் புந்தியர் பாலிற் பொருந்தான்
எப்பா டும்படான் எவரையும் கூடான்
கபடரைக் காணில் காதம் போவான்

கங்குலும் பகலும் கருதுவிவ காரத்
தடத்திடை வீழ்ந்து தயங்குறு நயங்கள்
சாருவன் கூறுவன் தருக்குவன் எவைக்கும்
அடங்குவன் வறிதே அமைதல் இல்லான்
இவனை மடியில் இருத்தித் திடமொழி
செப்பிடச் சோர்வு செறிவ தெனக்கே
இவன்பால் செய்வ தேதும் அறியேன்


(மாயை பெற்ற பிள்ளைகளில் மூன்றாவது பிள்ளை: சித்தம்)


செறிதரு கோளுள சேயிழை யாள்பினும்
நையப் புணர்ந்து நாள்பட வருந்தி
நாடி நாடி நாயைஈன் றதுபோல்

உணர்விலி என்றே உலகர் ஓதும்
சித்தம் என்னும் சிறிய குழவியைப்
பயந்து கரத்தில் பதற எடுத்தனள்
கரைதரு விண்ணீர்க் கடிதடம் ஆகக்
கதிர்விடும் உடுக்கள் கறங்குமீ னாக
மதியைத் தாமரை மலராய் மதித்ததில்
மூழ்கப் பிடிக்க முன்னங் கொய்திட
எண்ணுவன் எழுவன் எட்டுவன் சிறிதும்
நேரா திளைத்தே நிலைகள் பற்பல
வான்கண் டவன்போல் வாயாற் கொஞ்சுவன்

எனையும் கூவுவன் இவனிடர் பலவே
இடர்பல இயற்றி இழுக்கும் கொடியன்

(மாயை பெற்ற பிள்ளைகளில் நான்காவது பிள்ளை: அகங்காரம்)

இவன்செயல் நிற்க இவன்தாய் வயிற்றில்
தாருகன் என்னும் தறுகண் களிற்றைத்
தந்தமா யைக்குத் தனிமூத் தவளாய்
அகங்கா ரம்எனும் அடங்காக் காளை
அவனி மூன்றும் அதிர்ந்து கவிழக்
கடைமுறை பெற்றுக் களித்தனள் அவன்செயல்
கருதவும் பேசவும் கனிவாய் கூசுமே
கூற்றுவர் கோடி கொண்டுதித் தால்என

முளைத்து வளர்ந்தனன்
 மூத்தவன் மூழை
இளையவன் காளை எனும்இலக் கியமாய்
முன்னுள மூவரை முடுகி ஈர்த்தே
எண்ணில் விளையாட் டெழுப்புந் திறத்தன்
எல்லா ஆற்றலும் என்பால் உளதெனத்
தருக்குவன் இவன்தன் சங்கடம் பலவே
தன்னைத் தானே தகைமையில் மதிப்பன்
தரணியில் பெரியார் தாம்இலை என்பான்
மாதின் வயிற்றில் வந்தவன் எனாது
தானே பிறந்த தன்மைபோல் பேசுவன்

விடியும் அளவும் வீண்வா திடுவன்
வாயால் வண்மை வகைபல புரிவன்
ஓதவன் பெருமை ஈதவன் இயல்பே
சொல்லினும் கேளாத் துரியோ தனன்என
வானவர் தமக்கும் வணங்கா முடியன்
முன்வினை யாவும் முற்றும் திரண்டே
உருக்கொடிங் கியம்பொணா ஊறுகள் இயற்றுவன்
பிள்ளையும் அல்லன் கொள்ளியும் அல்லன்
இன்னும் இவன்செயும் இடர்பல வற்றை
எவர்பால் சொல்லி என்துயர் ஆற்றுவேன்

 

பாதகி துன்பம் பவக்கடல் ஏழும்
மக்கள் துன்பம் மலையோர் எட்டும்
நீளல்போ தாதென நெஞ்சில் நினைத்தோ
அவளது சூழ்ச்சி அற்புதம் அற்புதம்


(மூன்றாம் மனைவி: காமியம் என்னும் கன்மம்)

 

தொல்லை மரபில் தொழில்பல கற்ற
உலவுறு காமிய ஒண்டொடி என்னும்
கபடவஞ் சகியாம் களத்தினைக் கொணர்ந்து
பேய்பிடித் தவன்பால் பெரும்பூதம் கூட்டித்
தான்மணந் ததுபோ தாதிங் கென்றுபின்
மாற்றுகா லுக்கு மறுகால் ஆக

மாட்டி மிகமன மகிழ்ந்தாள் கூர்வேல்
கண்ணிணை யாள்நெடுங் கடல்சூழ் உலகில்
நிறைந்துள யாரையும் நெருங்குவள் கணத்தில்
இவள்செயும் வீரம் எண்ணி விளம்ப
உடலெலாம் நாவாய் உறினும் ஒண்ணா
ஒருத்தியே இரண்டங் குருகொடவ் வவற்றில்
பலவாய்ப் பலவுளும் பற்பல வாய்உரு
பொருத்த முறவே புரிவள்அவ் வவற்றில்
பலகால் புணர்ந்து பயன்வலி போக்கி
ஓருருக் கரும்பும் ஓருருக் காஞ்சியும்

ஓருரு அமுதமும் உண்ண அளிப்பாள்
விட்டிவை எல்லாம் பட்டினி யாக்குவள்
ஓருரு வடிவால் உயர்பஞ் சணைமேல்
அகமகிழ் சுரதம் அளித்துக் களிப்பள்
ஓருருத் தன்னால் உறுநிலப் பாய்மேல்
என்பு நோவ இழுத்தே அணைவள்
இங்ஙனம் பற்பல ஏழைக் குறும்புகள்
இயற்றி எவருமே ஏக்கங் கொளவே
இவள்முன் நம்செபம் என்றும் சாயா
அரகர என்றே அரற்றி மெலிவேன்

 

(காமியம் பெற்ற மூன்று பிள்ளைகள்: சத்துவம், இராசசம், தாமசம்)


இவ்வா றென்னை இழைத்திடுங் கொடியாள்
முக்குணம் மூன்றும் மூவுரு எடுத்தே
வயிறு கிழிய வந்த சிறார்கள்
மூவர் தமையுமம் மூவரும் அறியார்
வெலவரும் இவரால் மேலொடு கீழ்நடு
ஆய உலகும் அவ்வுல குயிரும்
பற்பல நெறியில் பாடுபட் டாரெனில்
எளியேன் பாடிங் கியம்பவும் படுமோ
இவர்கள்தம் இயல்பை எண்ணவும் பயமாம்
பாரெலாம் தாமாய்ப் பரவும் இவர்தாம்

ஏற்றுவர் இறக்குவர் எங்கு நடத்துவர்
இயற்றுவர் கீழ்மேல் எங்கு மாக
உவகை ஊட்டுவர் உறுசெவி மூடத்
திட்டுவர் பலவாய்த் திரண்டு திரண்டே
ஆற்றுறு மாற்றலை ஆற்றல் அரிதாம்
இவ்வுல கதனில் என்கண் காண
ஆயிழை யாளை ஆய்ந்து மணந்த
நாளில் தொடங்கிஇந் நாள்பரி யந்தம்
மனஞ்சலித் திடவே வலிய விலங்கினைத்
தாளில் இட்டுத் தயங்கி அலைந்தேன்

வீண்சஞ் சலமென விளம்பும் துகளை
முடிமூழ்க வாரி முடித்திட் டேனால்
ஈட்டிய பொருளால் இற்பசு ஈந்தே
எருமை தன்னை அருமையா யடைந்தனோ
ஆற்ற முடியா தலைவேன் எனவும்
குறித்தங் கெடுத்திடும் கூவல் நீரை
விழற்கு முத்துலை வேண்டிட் டிறைத்துத்
துணைக்கரம் சலித்தே துயருற் றேனோ
காற்றினும் விரைந்தே காரான் பாலைக்
கமரிடை ஏனோ கவிழ்த்தும் கலங்குவேன்

கலநீர் தன்னைக் கண்ணிற் சிந்திக்
கழறிக் குழறிக் கனிஉடல் களைக்கச்
சிலைநேர் நுதலில் சிறுவியர் வரும்ப
அருந்தொழில் செய்திங் கடைந்த பொருளைச்
சிவபுண் ணியத்தில் செலவிற் கலவாது
பெண்சிலு குக்குப் பெரிதும் ஒத்தேன்
பகலும் இரவும் பாவிகள் அலைத்தனர்
இவர்கள் சல்லியம் ஏற்பவர் ஆரெனக்
கூக்குரல் கொண்டு குழறுவன் எழுவன்
கிணற்றில் மண்ணைக் கெல்லப் பூதம்

தோன்றிய தென்னும் சொல்லை ஒத்தது
இவரூ டாட என்னால் முடியுமோ
அவளுக் கிவள்தான் அறியவந் தாளெனும்
மூன்று மாதரும் முழுப்பாய் சுருட்டிகள்
இவர்களில் ஒருவரும் இசையவந் தாரலர்
இச்சை வழியே இணங்கி வலிவில்
மணமது கொண்டு வாழ்ந்து வருகையில்
சண்டன் மிண்டன் தலைவர் என்ன
புவிமிசைப் பாதகர் போந்திங் குதித்தனர்
இவரால் நேர்ந்த எண்ணிலாத் துயரைப்

பொறுப்ப தரிதாம் வெறுப்பது விதியே
பாவ மின்னும் பற்பல உளவே


(குடிகூலி வீடு: உடல்)


குடும்பத் துடனே குடித்தனஞ் செய்யக்
குடிக் கூலிக்குக் கொண்ட மனையில்
கண்ட காட்சிகள் கனவிரோ தங்கள்
இராமா யணத்தும் பாரதத் தும்இலை
இழிவினும் இழிவது எண்சாண் உள்ளது
மலமும் சலமும் மாறா ஒழுக்கது
சுற்றினும் ஒன்பது பொத்தல் உடையது
சீழும் கிருமியும் சேர்ந்து கிடப்பது

என்புதோல் இறைச்சி எங்கும் செந்நீர்
ஆய்ந்து செய்த ஆகர முற்றது
அகலல் அணுகல் புகலல் இகலல்
அணிகள் துணிகள் அணிவ தாய
சால வித்தைகள் சதுரில் கொண்டது
கிடந்தும் இருந்தும் நடந்தும் பற்பல
பகரிம் மனையால் படும்பா டதிகம்


(மனைத் தலைவர்: வாதம் பித்தம் சிலேட்டமம்  )


இம்மனைத் தலைவராய் எழுந்த மூவர்
தறுகட் கடையர் தயவே இல்லார்
பணிசிர முதலாய்ப் பாதம் வரையில்

வாது செய்திடும் வண்கால வாதி
பெருகுறு கள்ளினும் பெரிதுறு மயக்கம்
பேதைமை காட்டும் பெருந்தீப் பித்தன்
கொடுவிடம் ஏறிடுங் கொள்கைபோல் இரக்கங்
கொள்ளா திடர்செய் குளிர்ந்த கொள்ளி இவர்கள்
என்னோ டிகல்வர் இரங்கார்
எனக்கு நேரும் ஏழ்மையும் பாரார்

 

(குடிகூலி: உணவு)


பிண்ட மென்னும் பெருங்குடிக் கூலி
அன்றைக் கன்றே நின்று வாங்குவர்
தெரியா தொருநாள் செலுத்தா விட்டால்
உதரத் துள்ளே உறுங்கனல் எழுப்பி
உள்ளும் புறத்தும் எண்ணெரி ஊட்டி
அருநோய் பற்பல அடிக்கடி செய்வர்
இவர்கொடுஞ் செய்கை எண்ணுந் தோறும்
பகீரென உள்ளம் பதைத்துக் கொதித்து
வெதும்பும் என்னில் விளம்புவ தென்னே

(மனைத் தலைவனின் வெளி விவகாரம்: மதமாச்சரியங்கள்)

சினமிகும் இவர்தம் செய்கைகள் கனவிலும்
நினைந்து விழித்து நேர்வதன் முன்னர்
மற்போர் கருதி வந்தவர் போல
ஓதும்வே தாந்தம் உரைப்பர் சிலபேர்

வாட்போ ரினுக்கு வந்தவர் போல
வயங்குசித் தாந்தம் வழங்குவர் சிலபேர்
தண்டா யுதப்போர் தாங்குவார் போல
இதிகா சத்தை இசைப்பவர் சிலபேர்
உலக்கைப் போரை உற்றார் போல
இலக்கண நூலை இயம்புவர் சிலபேர்
கற்போர் விளைக்கக் காட்டுவார் போலச்
சமய நூல்களைச் சாற்றுவர் சிலபேர்
விவகா ரங்கள் விளம்புவர் சிலபேர்

மடிபிடி போர்க்கு வாய்ந்தவர் போல
மததூ ஷணைகள் வழங்குவர் சிலபேர்
கட்குடியர் வந்து கலக்குதல் போலக்
காம நூலைக் கழறுவர் சிலபேர்
விழற்கு நீரை விடுவார் போல
வீண்கதை பேச விழைவார் சிலபேர்
இவர்கள் முன்னே இவருக் கேற்ப
குரல்கம் மிடவும் குறுநா உலரவும்
அழலை எழவும் அவரவர் தம்பால்
சமயோ சிதமாய்ச் சந்ததம் பேசி

இயன்ற மட்டில் ஈடுதந் தயர்வேன்

(மனைத் தலைவனின் உள் விவகாரம்: அன்றாடச் செயல்பாடு )

பின்னர் மனையின் பின்புறத் தேகிக்
கலக்கு மலத்தைக் கடிதே கழித்துக்
கல்லில் அழுக்கைக் கழற்றுதல் போன்று
பல்லின் அழுக்கைப் பண்பின் மாற்றிச்
சோமனைப் போலவெண் சோமனைத் துவைத்து
நன்னீர் ஆடி நறுமலர் கொய்து
தேவருக் கேற்ற திரவியங் கூட்டிப்
பாவையை வைத்துப் பாடி ஆடும்
சிறாரைப் போலச் செய்பணி யாற்றி

மண்ணின் சுவர்க்கு வண்சுதை தீட்டல்போல்
வெண்ணீ றதனை விளங்கப் பூசிப்
புகழ்ருத் ராக்கப் பூனை என்ன
உற்ற செபவடம் உருட்டி உருட்டிக்
குரண்டகம் போன்று குறித்த யோகம்
செய்த பின்னர் சிறிது நேரம்
அருத்தியிற் பூசனை அமர்ந்தங் காற்றி
ஊன்பிண் டத்திற் குறுபிண்ட மீந்து
குடிக்கூ லிக்கடன் குறையறத் தீர்த்துப்
பகல்வே டத்தால் பலரை விரட்டி
 

நித்திரைப் பரத்தையை நேர்ந்து கூடவும்
பொழுதும் சரியாய்ப் போகின் றதுவே.

//வள்ளலார் அருளிய குடும்ப கோரம் முற்றிற்று//

 


No comments:

Post a Comment