Saturday, November 5, 2022

அய்யர் என்பவர் யார்?

 


திருமணம் நடத்தி வைப்பவரை இக்காலத்தில் அய்யர் என்கின்றோம் ஆனால் தொல்காப்பியர் கூறுவது கரணம் என்னும் திருமண முறையை யாத்தவர் அய்யர் என்கின்றார். அதாவது உருவாக்கியவர்கள் இயற்றியவர்கள் என்கிறார். அய்யர் என்பது தூயதமிழ் சொல். அய்யா என்பதின் அர் விகுதி பெற்ற மதிப்புறு சொல் அய்யர். அது இக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயராக மாறிப்போனது அல்லது மாற்றப்பட்டது என்பதை அறியவேண்டும்.

 

ஆதலால் அய்யர் என்னும் தூய தமிழ் சொல்லை நாம் திருமணம் போன்ற வீட்டு நிகழ்வுகளை சமசுகிருதம் தவிர்த்து தமிழ் முறையில் நடத்தி வைக்கும் ஆரியப் பார்ப்பனர் அல்லாத தமிழர்களை அய்யர் என்று அழைத்திடின் சரியே.

 

அய்யன் திரு வள்ளுவர் என்பதன் பொருள்

தமிழின் தலைச்சிறந்த நீதி நூல் திருக்குறள். இதனை எழுதியவர் திரு வள்ளுவர். வள்ளுவரை அவர் எழுதிய நூலின் பெருமையையும் புகழையும் கண்டு அவரை தம்மவர் என்று பலரும் உரிமைக் கொண்டாடும் நிலையைக் காண முடிகிறது. அவரை தங்கள் சாதி மத கூட்டுக்குள் அடைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் அவருடைய திருக்குறளை முற்றும் கற்று தெளிந்த நடுநிலை அறிஞர்கள் யாரும் இதனை ஒப்பார்.

 

“வள்ளுவர் செய் திருக்குறளை..மறு அற நன்கு உணர்ந்தவர்கள்

உள்ளுவரோ "மனு" ஆதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி?

 

என்று மனோன்மணீயம் சுந்தரனார் வினவுகிறார்.

 

ஆயினும் சிலர் திரு வள்ளுவருக்கு மதச்சாயம் சாதிவண்ணம் பூச நினைக்கிறார்கள். அவருடைய கற்பனை உருவப் படத்திற்கு மதச் சின்னங்களையும் குறிகளையும் இட்டு பூணூல் அணிவித்து அவரைத் தம் இனத்தவர் என குறிப்பிட எண்ணிய செயலுக்கு முற்றுப் புள்ளி வைத்தாகிவிட்டது.

 

திருக்குறளை எழுதிய அந்த மாமனிதரை யாரும் பார்க்கவில்லை ஆயினும் அவருக்கு ஒரு உருவம் கொடுத்து அடையாளப்படுத்தும் நோக்கில்  அரசு ஒரு உருவப்படைத்தை அங்கீகாரம் செய்து அறிவித்தது. அது எந்தவிதமான சாதி மத அடையாளங்களும் இன்றி வள்ளுவர் எல்லோருக்குமானவர் என்கிற எண்ணத்தை விதைக்கும் வண்ணம் இருந்தது. 

 

அதே உருவத் தோற்றத்தில் இருபத்தோறாம் நூற்றாண்டுத் துவக்கத்தில் குமரிக்கடலில் பாறையின் மேல் 133 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் வானுயர் வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது.

 

அப்போது தமிழக முதல் அமைச்சராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் திரு வள்ளுவரை அய்யன் திருவள்ளுவர் என்று அழைக்க வேண்டுகோள் விடுத்தார். அதன் உட்கருத்து என்னவென்று சொன்னால் வள்ளுவர் சாதிமதம் கடந்தவர் என்பதை அவரது உருவத்தால் உறுதி செய்து பின்னர் பெயரில் அய்யன் என்னும் அடைமொழியை முன்னிட்டு வழங்கியது அவர் நம் மதிப்பிற்குரிய அய்யா அதிலும் நம் நெஞ்சிற்கும் நேசத்திற்கும் நெருக்கமானவர் என்பதால் அய்யன் என்று விளிக்க சொன்னார் என்பது விவரம் அறிந்தவர்களுக்கு விளங்கும்.

 

No comments:

Post a Comment