Thursday, December 23, 2021

மண்ணும் மானமும் மாண்பே

 







அன்பார்ந்த நண்பர்களே ஆன்றவிந்தடங்கிய சான்றோர் பெருமக்கள் கூடிய இந்த இணைய வழி கூடலில் உங்களையெல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படியான இணைய வழி கூடலுக்கு ஏற்பாடு செய்து அதனை திறம்பட நடத்தி வரும் தேடல் அறக்கட்டலையின் அறங்காவலர் குழுவிற்கு குறிப்பாக என் அருமை தோழர் திரு சம்பத் குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டையும் நன்றியும் தெரிவித்துக் கொள்ள கடமை பட்டு உள்ளேன் .

இன்றைக்கு இந்த நிகழ்வில் பத்து தலைப்புகளில் பல அறிஞர்கள் கல்வியாளர்கள் முனைவர்கள் மிக சிறப்பாக உரை ஆற்ற இருக்கிறார்கள். . இந்த டிசம்பர் மாதத்தின் சிறப்பாக மூன்று நாட்கள் நினைவு கூறத்தக்கன.என்ற கண்ணோட்டத்துடன்  அவற்றை நினைவுறுத்தி உரை ஆஎர்ற இருக்கிறார்கள்...பாராட்டத்தக்கது.

டிசம்பர் மாத சிறப்புகளில் குறிப்பிடத்தக்க அந்த மூன்று  நாட்கள் என்று இங்கு குறிப்பிடப்படுபவை:

டிசம்பர் 6 அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்

டிசம்பர் 1௦ மனித உரிமைகள் நாள்

டிசம்பர் 23 விவசாயிகள் நாள்

இம்மூன்றினுள் இடைப்பட்ட நாளாக இணைக்கும் நாளாக அமைந்து இருப்பது மனித உரிமைகள் நாள் ஆகும்.

உலகளாவிய மனித உரிமை அறிவிக்கை  Universal Declaration of Human Rights சுருக்கமாக UDHR என்று சொல்கிற பன்னாட்டு மனித உரிமை பிரகடனம் என்கிற பன்னாட்டு சட்டத்தை ஐக்கிய நாட்டு  அவையில்  டிசம்பர் 10ஆம் தேதி 1948 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

அதில் முப்பது வகையான மனித உரிமைகள் பட்டியலிடப்பட்டு அவைகளை யாரும் மீறக் கூடாது என்று ஐ.நா அவையின் உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டு அறிவித்த நாள்தான் டிசம்பர் பத்து. . ...

 

இப்போது எழுபத்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன ஆயினும் இன்னும் நாம் அந்த உரிமைகளை நிலைநாட்டி  இருக்கின்றோமா இல்லையா என்பதை ஆண்டுதோறும் எண்ணிப் பார்க்க வேண்டிய நாளாக இந்த நாளை விழாவாக கொண்டாடிக் கொண்டு வருகிறோம்.

உண்மையில் சொல்வதென்றால் இது ஒரு மரபாக சம்ப்ராயதமாக தான் கடைப் பிடிக்கப் படுகிறது என்று நான் கருதுகிறேன். இந்த வகையில் நாம் கடந்து செல்ல வேண்டிய தொலைவு பயணம் மிக நீண்டு இருப்பதை யாரும் மறுத்து விட முடியாது.

 

உரிமைகள் காக்கப்படுகின்றனவா இல்லை மீறப்படுகின்றனவா அப்படி மீறுபவர்கள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றி எல்லாம் சிந்திக்கக் கூடிய நாளாகவும்  இன்று இருக்கிறது.

 

அந்த சிந்தனையின் வெளிப்பாடாக அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய நினைவு நாளையும் சேர்த்து நிகழ்த்தும் இந்த நிகழ்ச்சியில் அவருடைய தனி மனித வாழ்வும் அரசியல் வாழ்வையும் நினைத்து அவர் இந்திய மக்களுக்கு மனித உரிமை விவகாரத்தில் செய்த தொண்டை குறிப்பிட்டு ஆக வேண்டும்.

அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் பிறந்ததின் விளைவாக சிறு வயதில் அனுபவித்த துன்பங்கள் பின்னாளில் அவர் அவர்சார்ந்த சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் பெண்களுக்காகவும் உரிமைக் குரல் எழுப்பியதையும் அதற்கான ஆக்க பூர்வமான சட்டங்களை இயற்ற வழி வகை செய்தததையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

 

அவருடைய சிறு வயதில் அவருக்கு தலித் என்கிற காரணத்தால் தாகத்தால்  தவித்த வாய்க்கு தண்ணீர் தர மறுத்த நாடு. இது. பாரிஸ்டர் பட்டம் பெற்று அரசாங்க வேலையில் அமர்ந்த போதும் அலுவலகத்தில்

பொதுப் பயன்பாட்டுக்கென வைக்கப்பட்டிருந்த பானையில் இருந்து நீரெடுத்துக் குடிக்க முடியாமல் தடுக்கப்பட்டவர் அவர்.

 

இப்படியான  நிலைமை தமிழ் நாட்டிலும் இருந்து இருக்கிறது. இங்கே பிராமணர்களுக்கு தனியாக குடிநீர் பானை  இருந்திருக்கிறது. மற்றவர்கள் பிராமணர் அல்லாதார் அதிலிருந்து நீரை பருக கூடாது. .இதை மறைந்த இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் படித்த காலத்தில் பள்ளியில் நடைமுறையில் இருந்ததாக தன்னுடைய உரையில் பல தடவை குறிப்பிட்டு இருக்கிறார். திராவிட இயக்கம் தமிழ் நாட்டில் தோன்றியதன் காரணத்தை அவர் சொல்ல வரும் போது இதனைக் குறிப்பிடுகின்றார். 1922 ஆம் ஆண்டு பிறந்த அவருடைய பிறந்த நாளும் இதே டிசம்பர் மாதம்தான். தேதி பத்தொன்பது. என்பதையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

 

இத்தகைய மனித உரிமை மீறல்கள் இந்தியத்திரு நாட்டில் சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் சாத்திர சம்பிராயுதங்களின் பெயரால் மனு நீதியின் பெயரால் ஒடுக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள் வரிசையில் பெண்களும் அடங்குவர்.

சாதி மத சம்பிராயுதங்கள் ஒருவருடைய கல்வி  கற்கும் உரிமையில் தலை  இட முடியாது தடுத்து விட இயலாது என்பதை நிரூபித்தவர். அண்ணல் அம்பேத்கர்.

தமிழ் நாட்டில் அத்தகைய கருத்துகளை கடுமையாக எடுத்து சொல்லி ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் பெண்களுக்காக குரல் கொடுத்து போராட்டம் செய்து நம்மிடையே தன்மான உணர்வைத் தூண்டி விழிப்படைய செய்தவர் ஒருவர் உண்டு.

அவர் தமிழர் தந்தை என்றும் எல்லோருக்கும் பெரியார் என்றும் போற்றப்படும்  தலைவராக இன்றும் மதிக்கப்படுகிறார்.. அவருடைய நினைவு நாளும் இதே டிசம்பர் மாதம் இருபத்தைந்தாம் நாள் தான் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

அண்ணல் அம்பேத்கர் சிறந்த கல்விமான்.பொருளாதார மேதை தத்துவ வாதி வரலாற்று ஆய்வாளர், இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவர் அரசியல்வாதி ஒன்றிய அரசின் அமைச்சர் என்கிற பல்வேறு தளங்களில் அவர் ஆற்றிய பணிகள் ஒவ்வொன்றும் மனித  உரிமைகள் சார்ந்தவை. இந்திய மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்துபவை.

-    வயது வந்தோர் அனைவருக்கும் இன்றுள்ள வாக்குரிமை

-    நிர்வாகத்தில் அனைவருக்குமான உரிமை  வேண்டும் என்பதால் பட்டியல் இன மக்களுக்கு அவர் கோரிய பிரதிநிதித்துவம்

-    அதுவே பின்னாளில் பிற்படுத்தப்பட்டோரும் பெண்களும் அத்தகைய பிரதிநிதித்துவத்தைப் பெறவும் வழிகோலியது.

-    அரசுப் பணியாளர் தேர்வாணையங்களும் வேலைவாய்ப்புப் பதிவு அலுவலகங்களும். உருவாக காரணம் அவர் அரசியல் நிர்ணய சபையில் முன்மொழிந்ததின் விளைவாகவே.

-    தொழிலாளர் துறை அமைச்சர் என்கிற முறையில் 1942 நவம்பர் 27 ஆம் நாள் அவர் கூட்டிய ஏழாவது இந்திய தொழிலாளர் மாநாட்டில்தான் வேலைநாள் என்பது எட்டுமணி நேரம் என்கிற முடிவினை அறிவித்தவர் அண்ணல் அம்பேத்கர்.

பெரியாரும் அம்பேத்கரும் வெவ்வேறு முனைகளில் ஒரே கொள்கையை தத்துவத்தை சமகாலத்தில் முன்மொழியவும் பரப்பிடவும் போராடவும் செயல்படுத்தவும் செய்தனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அம்பேத்கருடைய உரைகளை எழுத்துகளை தமிழகத்தில் முதன் முதலாக அதிக அளவில் பரப்பியதில் முன்னிலை வகிப்பவர் பெரியார். அம்பேத்கர் எழுதிய சாதி ஒழிப்பு என்னும் ஆவணம் அவர் பெரியாருக்கு அனுப்பி வைத்தது. அதை  தமிழில் முதல் முதலாக மொழி பெயர்க்க செய்து வெளியிட்டவர் பெரியார்.

இந்திய சூழலில் சமூக ஏற்றத் தாழ்வு பொருளாதார ஏற்றத் தாழ்வு இவற்றில் பொருளாதார ஏற்றத்தாழ்வை முதலில் களைந்தால் சமூக ஏற்றத் தாழ்வு தானே சரியாகும். பொருளாதாரம் என்கிற அடிக்கட்டுமானத்தை மாற்றினால் சாதி என்கிற மேற்கட்டுமானம் தானாக மாறிவிடும் என்கின்ற சிலரின் வாதத்தை பெரியார் அம்பேத்கர் இருவருமே ஏற்றுக் கொள்ளவில்லை. அதே போன்று இருவரும் இந்துத்துவ மேலாண்மைக்கு எதிராக முழக்கம் இட்டவர்கள் போராடியவர்கள் என்பதையும் இக்கால இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்று நான் கருதுகிறேன்.

அடுத்ததாக தேசிய விவசாயிகள் நாள் என்று டிசம்பர் இருபத்து மூன்றாம் நாளை 2001 ஆம் ஆண்டு இந்திய அரசு அறிவித்தது. இந்தியப் பிரதமராக மிக குறைந்த காலம் பதவி வகித்த திரு சரண் சிங் அவர்களுடைய பிறந்த நாளை விவசாயிகளின் நாளாக இந்திய அரசு அறிவித்தது. வடநாட்டில் உ,பி அரியானா  பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விவசாயிகளின் பாது காப்பாளராக அவர்களின் உரிமைக்கு பாடுபட்ட விவசாயிகளின் தலைவராக விளங்கியவர் சவுத்ரி சரண் சிங் அவர்கள். அவர் உ.பி யில்1952 ஆண்டு வேளாண்மை துறை அமைச்சராக இருந்த போது கொண்டு வந்த ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம் விவசாயிகளின் எதிர்காலத்திற்கு ஏற்றி வைத்த தீபம் என்று சொல்கிறார்கள். அந்த தீப ஒளியில் தான் பல்வேறு திட்டங்களும் சட்டங்களும் பிற்காலத்தில் இயற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. . அதனாலேயே அவரை மதிக்கும் பொருட்டு அவருடைய பிறந்தநாளை விவசாயிகள் நாளாக பிஜேபி ஆட்சியில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது. திரு சரண்சிங் அவர்கள் சுதந்திரபோராட்ட்ட காலகட்டத்தில் காங்கிரசில் இருந்த போது 1939 ஆம் ஆண்டு LAND UTILISATION BILL என்கிற ஆவணத்தை தயாரித்து அளித்தார் என்று அவருடைய வரலாற்று பதிவுகள் சொல்கின்றன.

இந்த சமயத்தில் நாம் இன்னொன்றையும் கருத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஜமீன்தாரி முறை ஒழிப்பிற்கு முதல் முதலாக எழுந்த குரல் தமிழ் நாட்டில்தான் என்பதும் அதுவும் கூட தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தால்தான் என்பதும் வரலாற்று உண்மையாக கிடக்கிறது.

 

1933 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் இராசிபுரத்தில், சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் ஜமீன்தாரல்லாதார் மாநாடுஒன்று நடைபெற்றது.. அதில் பெரியார் பேசிய உரை 27.08.1933 ஆம் நாளிட்ட குடி அரசு ஏட்டில் முழுமையாக வெளியாகி உள்ளது.

அந்த மாநாட்டில் இயற்றப் பட்ட தீர்மானம்:

  உலக செல்வத்தை ஒரே பக்கம் சேர்க்கும் முறையை ஒழிப்பதற்கும், உலகப் பொருளதார, சமத்துவத்துக்கும் பாடுபடுகிற மக்கள் அதன் பயனை சரிவர அடையவேண்டும் என்பதற்கும், ஜமீன்தார் முறையானது பெருத்த கெடுதியாகவும், தடையாகவும் இருந்துவருவதால் ஜமீன்தார் தன்மையை அடியோடு ஒழிக்கப் பகுத்தறிவுக்கு ஏற்றவழியிலும், பொருளாதார சமத்துவ நியாய வழியிலும் சுயமரியாதை இயக்கம் பாடுபடவேண்டுமென்று இம் மகாநாடு தீர்மானிக்கிறது.”

இவ்வாறு ஜமீன்தார்களுக்கு எதிராக ஒரு மாபெரும் மாநாட்டைக் கூட்டி, அவர்களுக்கு எதிராக ஒரு எதிர்ப்புணர்ச்சியைக் கட்டி எழுப்பியவர் பெரியார். 

அவரால்தான் தமிழ் நாட்டில் பல்வேறு ஆட்சியில் மக்கள் ஆதரவுடன் நில சீர்திருத்த சட்டங்கள் வந்து நடைமுறை படுத்தப்பட்டன. அந்த அடிப்படையில் பிற்காலத்தில்  நிறை வேற்றப்பட்ட விவசாயிகளின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள்

-    நில உச்ச வரம்பை 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் வரையறை.  கொண்டுவந்தார் கலைஞர்.

-    பெரும் நிலச் சீர்திருத்த நடவடிக்கை இது.

-    விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்பட்டது.

-    விவசாயிகளின் உற்பத்தி விளைபொருட்கள் நேரடி விற்பனைக்கு உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன.

-    விவசாயிகளின் நலன் பேண ஒரே நேரத்தில் 40,433 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ. 7,000 கோடி கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடிசெய்யப்பட்டது.

-    விவசாயத் தொழில் நலவாரியம் உட்பட 34 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள்

1971 ம் ஆண்டு 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்று உச்ச வரம்புச் சட்டம் இயற்றப்பட்ட போது கைப்பற்றப்பட்ட உபரி நிலம்  1 லட்சத்து 78 ஆயிரத்து 880 ஏக்கர்..  தகுதியுள்ள 1 லட்சத்து 37 ஆயிரத்து 236 நிலமற்ற ஏழைகளுக்கு அவை  வழங்கப்பட்டது. அதிலே 61 ஆயிரத்து 985 பேர் பட்டியலின மக்கள் ஆவர். அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய என்னத்தை ஈடேற்றிய மண் தமிழ்நாடு.

இப்படிப்பட்ட பல்வேறு சீர்திருத்த சட்டங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நாட்டு விடுதலைக்குப் பிறகு அவரவர் கருத்துகளுக்கு ஏற்ப கொள்கைகளுக்கு ஏற்ப கொண்டு வரப்பட்டன. அந்த சட்டங்களுக்கு எதிராக யாரும் எந்த ஒரு விவசாயியும் போராடிய வரலாறு இல்லை.

ஆனால் 2020 ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து கடுமையான போராட்டத்தை தலை  நகர் டெல்லியில் நடத்தியதைக் கண்டோம்.  நவம்பர் 19, 2021 அன்று ஒரு தொலைக்காட்சி உரையில், இந்தியப் பிரதம அமைச்சர் நரேந்திர மோடி, டிசம்பரில் வரவிருக்கும் குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தனது அரசாங்கம் மூன்று சட்டங்களை ரத்து செய்யும் என்று கூறி அவ்விதமாகவே அந்த மூன்று சட்டங்களும் திரும்பப் பெறப் பட்டுள்ளன. இது விவசாயிகளின் உரிமைப் பிரச்சனை .அதில் அவர்கள் வெற்றி கண்டார்கள். அதற்கு அவர்கள் கொடுத்த விலை 7௦௦ உயிர்கள். ஆம் அந்த போராட்டத்தின் விளைவாக எழுநூறு விவசாயிகள் மரணம் அடைந்தார்கள் என்பது மாபெரும் சரித்திர சோகம்.

இந்திய மக்கள் தொகையில் சுமார் நாற்பது முதல் ஐம்பது விழுக்காடு மக்கள் விவசாயத்தில் ஈடு படுவதாக சொல்லப்படுகிறது. புள்ளிவிவர தகவல் படி அவர்களுடைய பொருளாதார பங்களிப்பு ௨௦ விழுக்காடாக இருக்கிறது. இது பயிர் தொழில்  காடு  மற்றும் கடல் சார்ந்த மீன்பிடி  தொழில்களையும் சேர்த்த கணக்கீடு.  

இந்த நிலையில் விவசாயிகள் தற்கொலை மகாராட்டியம், தெலுங்கானா ஆந்திரா கர்நாடக போன்ற மாநிலங்களில் நிகழ்வது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டி இருக்கிறது. இதற்க்கான காரணம் இது வரை துல்லியமாக அறியப்பட்டு எந்த அரசும் அதை களைய வில்லை என்பது கவலை அளிக்கும் விவகாரம் ஆகும். இதற்க்கு பெரும்பான்மையான அறிஞர்கள் கூறுவது விவசாய உற்பத்திக்கு தகுந்த விலை கிடைப்பதில்லை என்பதாகும். இதை களைய குறைந்த பக்க விலை நிர்ணயம் விவசாய பொருள்களுக்கு வேண்டும் என்பதாகும். விவசாயம் ஒரு தொழிலாகவும் அதன் உற்பத்திப் பொருளை விலை நிர்ணயம் செய்யும் உரிமை விவசாயிக்கு இருக்கும் நிலை வந்தால் மட்டும் இவர்கள் பிரச்சனையில் தீர்வு  கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இடைத் தரகர்களும் கடன் தரும் லேவாதேவி ஆட்களும் இந்த துறையில் ஆதிக்கம் செலுத்தி விவசாயிகளின் வாழ்க்கையை பாழடிக்கின்றதாக சொல்லப்படுகிறது. இதை எல்லாம் கவனத்தில் கொண்டு அதற்கான தீர்வு காணும்  நடவடிக்கைகளை விவசாயிகளின் ஒப்புதலுடன் செய்ய வேண்டியது அரசின் கடமையாகும்.

ஒரு காலத்தில் கூட்டுறவு துறையின் மூலமாக விவசாய தொழில் மேலான்மைசெய்யப்பட்டது. அது ஏனோ இப்போது சுருங்கி விட்டது. கூட்டுறவு முறையில்  அரசின் கண்காணிப்பு இருக்கும். அதில் நிர்வாகத்தில்  ஊழல் இருந்தாலும் உறுப்பினர்களால் சுட்டிக் காட்டப்படும். உறுப்பினர்கள் தங்கள் அனுபவங்களை பரிமாறிக்கொள்ள வசதி இருக்கும்.

ஆனால் இப்போது புதிய தாராளமயமாக்கல் என்கிற முறை வந்த பின்னால் அரசாங்கத்தின் கடமைகள் தட்டிக் கழிக்கப்படுகின்றன. முதலாளி வர்கம் என்று ஒரு கூட்டம் இருப்பதாக பேசிக் கொண்ட காலம் போய் ஓரிரு முதலாளிகள் மட்டும் உருவாகும் நிலை வந்து விட்டது.

உழைத்து முன்னேறி முதலாளி ஆகலாம் என்ற நிலை இருந்தது இப்போது மாறி விட்டது. பெரும்பான்மையான மக்கள் சேவைத் துறையில் மட்டும் ஈடுபடும்படியும் வெகு சிலரே முதலாளிகளாக மாறும் சூழ்நிலை உருவாக்கப்பட்டு வருவதை காண்கிறோம். விவசாயமும் கூட பெரும் முதலாளிகள் கைக்கு போகும் நிலை உருவாக்கப்படுகிறது.    இவைகள் எல்லாம் எத்தகைய தாக்கத்தை எதிர்காலத்தில் உருவாக்கும் இவற்றில் மனித உரிமை பிரச்சனைகள் என்ன என்பதை எல்லாம் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

மக்கள் சக்தியை விட மகா சக்தி ஒரு ஜனநாயக நாட்டில் இருக்க முடியாது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார் அறிஞர் அண்ணா. மக்களிடம் கல்வியும் அறிவும் விழிப்புணர்வும் ஏற்பட்டால் மட்டுமே  அவர்களுடைய தீர்ப்பில் நீதி இருக்கும். நேர்மையான ஆட்சி கிடைக்கும். அதற்காக நம்மைப் போன்றவர்கள் சமுதாயப்பணியில் ஈடுபடுவது அவசியம்.

இப்படியான் கலந்துரையாடல் கருத்துரைகள் மூலமாக மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்க முடியும். அந்த வகையில் செயல் படும் தேடல் அறக்கட்டளை நிர்வாகத்தினர் அனைவருக்கும்  இந்த நிகழ்வில் உரை ஆற்ற பங்கெடுத்துக் கொள்ளும் அறிஞர் பெருமக்களுக்கும்

 மீண்டும் நன்றியும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.

 

 

 

No comments:

Post a Comment