Tuesday, October 18, 2016

அண்ணன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது - பல்லடம் உழவர் மாநாட்டில்

அண்ணன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
குலக்கல்வி திட்டத்தினால் குலைந்து போன ராஜாஜி அவர்களின் ஆட்சிக்குப் பிறகு காமராஜர் முதல்வராக பொறுபேற்ற சமயம். குடியாத்தம் தேர்தலில் குணாளா குலக்கொழுந்தே என்று போற்றப்பட்டு பச்சைத்தமிழன் காமராஜரை திகவும் திமுகவும் சேர்ந்தே ஆதரித்த காலகட்டம். 1 9 5 4 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி கோவை மாவட்ட உழவர் மாநாடு பல்லடத்தில் நடந்தது.. அந்த மாநாட்டிற்கு அப்போதைய முதல்வர் திரு காமராஜர் அழைக்கப்பட்டு வருவதாகவும் இருந்தது.
ஆனால் முதல்வர் கடைசி நேரத்தில் வராமல் வாழ்த்து தந்தி அனுப்பினார்.
அந்த தந்தியில் “மாநாடு வெற்றிகரமாக நடைபெற வேண்டும். உழவர்கள் நாட்டு முன்னேற்திற்கு உழைக்க மாநாடு பயன்பட வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று வாழ்த்துச் செய்தி தெரிவிக்கிறது.
அந்த மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார். அவர் கலந்துகொண்டு உரை ஆற்றுகையில்
“இன்று உழவுத் தொழில் நம் நாட்டைப் பொறுத்தவரையில், இலாபகரமானதாக இல்லை. இதற்குக் காரணம் என்ன? உழவுத் தொழில் இன்னமும் மெருகேறாத ஒரு தொழிலாக இங்கு இருப்பானேன்?
இந்த நாட்டில் ஒரு ஏக்கர் நிலத்தில் கிடைக்கும் உற்பத்திப் பொருள், வேறு பல நாடுகளில் இதே அளவு நிலத்தில் கிடைக்கும் உற்பத்திப் பொருள்களைக் காட்டிலும் பல மடங்கு குறைவாக இருக்கிறது – இதற்குக் காரணம் என்ன?"
"இந்த நாட்டு உழவர் பெருமக்கள் சரியாக உழைப்பதில்லையா? என்றால், அப்படி அல்ல, வேற்று நாட்டவர்களைக் காட்டிலும், இந்த நாட்டவர்தான் கடுமையாக உழைக்கிறார்கள், அதிலும், கோவை மாவட்டம் போன்ற இடங்களில் நிலத்தை உழுது பயிரிட்டுப் பலனடைவது என்பது, கல்லிலிருந்து நார் உரிப்பதைப் போன்றதாகும்! பருக்கைக் கற்களும், முற்புதர்களும், கரம்புக் காடுகளும் நிறைந்த இந்த மாவட்டத்தில், உழவரின் உழைப்பு அளவிட முடியாதது! அப்படியெல்லாம் உழைத்தும் நல்ல வருமானமும் வளமும், பலனும் இல்லாமற் போவானேன்?
வேறு பல மேலை நாடுகளில், உழவுத் தொழிலுடன் அவர்கள் விஞ்ஞானத்தையும் கலந்துகொண்டு வேலை செய்கிறார்கள், அதனால் அவர்கள் குறைவாக உழைத்தாலும், நம்மைக் காட்டிலும் அதிகமாகப் பலன் பெறுகிறார்கள்".
"நாம் விஞ்ஞான அறிவைப் பெருக்கிக் கொண்டு, உழவுத் தொழிலையும் அந்த விஞ்ஞானத்துடன் செய்தால்தான் குறைந்த உழைப்பில் நிறையப் பலன்பெற முடியும்" என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார் ..
இன்றல்ல 62 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கண்ட திமுக என்னும் அரசியல் இயக்கம் தேர்தல் அரங்கில் இறங்குவதற்கு முன்பே இந்த நாட்டு மக்களின் உண்மை நிலை உணர்ந்து ஆற்றிய உரை இது..
மேலும் அவர் அந்த மாநாட்டில் பேசும் போது
“உழவுத் தொழில் முன்னேறி, நல்ல பலன் தரும் – இலாபம் தரும் தொழிலாக மாற முதலாவதாக, அந்தத் தொழில் தற்கால விஞ்ஞான அறிவுடன் செய்யப்பட வேண்டும், இரண்டாவதாக, இன்று, உழவர் பெருமக்களுக்கு உழவுத் தொழிலில் அக்கறை இல்லை, இந்த அக்கறை அவர்களுக்கு வருமாறு செய்ய வேண்டும். இந்த இரண்டும் செய்தால்தான் உழவுத் தொழில் ஈடேற முடியும், நாடு முன்னேற்றத்தைக் காண முடியும்.
உழவர்களுக்கு அக்கறை இல்லை என்பதை இனியும் மூடி மறைத்துப் பயனில்லை. உழவுத் தொழிலிலிருந்த அக்கறை இப்போது குறைந்து விட்டது. நான் இப்படிச் சொல்லும்போது, உழவர்கள் எல்லோரும் ஏதோ உழைக்காத சோம்பேறிகளாக மாறிவிட்டார்கள் என நான் கூறுவதாக எண்ணிவிட வேண்டாம். எப்படி அவர்களுக்கு அக்கறை குறையாமலிருக்க முடியும்?"
"ஒரு சிறு வெற்றிலைப் பாக்குக் கடை வைத்திருப்பவர் கூட, தங்களிலும் சற்று உயர்ந்த வாழ்வு பெற்றிருப்பதைப் பார்க்கிறார்கள், தங்களைக் காட்டிலும் குறைந்த அளவு உழைக்கும் பலர், பல வழியிலும் சற்று வசதியான வாழ்வு பெற்றிருப்பதைக் கண்டு புழுங்குகிறார்கள், அதாவது, உழவுத் தொழில், வாழ்வுக்குப் பாதுகாப்புடைய தொழிலாக இல்லை, உழவுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்குப் போதுமான வாழ்க்கை வசதிகள் தரப்படவில்லை – இதை எண்ணும்போது, உழவர்களுக்கு, தங்கள் தொழில்மீது வெறுப்பேற்படுவது இயற்கைதானே!"
"இரண்டாவதாக, உழவர்கள் ஆண்டு முழுவதும் உழைக்கிறார்கள், உழுது பண்படுத்தி, பரம்படித்து, விதைத்து, நீர் பாய்ச்சி, களை எடுத்து, காவல் புரிந்து, பயிர் வளர்க்கிறார்கள் இவர்கள் உழைப்பால் உயர்கிறது நெற்கதிர், பார்க்கிறார்கள் – பெருமூச்சு விடாமலா இருக்க முடியும்?"
"இனி அவர்களுக்குத் தொழிலில் அக்கறை வளர இரண்டு நல்ல காரியங்களைச் செய்தாக வேண்டும் – ஒன்று, வேறு பல தொழில்களில் கிடைக்கும் பாதுகாப்பு இந்தத் தொழிலுக்கும் கிடைக்கத் திட்டம் தீட்டியாக வேண்டும், இரண்டாவதாக, உழுகிறவர்களுக்கு நிலம் தரப்பட வேண்டும்”
கேட்டீர்களா அண்ணாவின் அறிவுமிக்க அறவுரையை. இதுவரை இந்த இந்தியத் திருநாட்டில் உழவுத் தொழிலுக்கு பாதுகாப்பு இல்லை. விவசாயப் பொருள்கள் விலை நிர்ணயம் விவசாயிகளிடம் இல்லை. அன்றைக்கு தொடங்கிய அக்கறையின்மை உச்சத்திற்கு போய்விட்டது..
உழுபவனுக்கு நிலம் சொந்தமாக வேண்டும் என்றார். சோசிலிசம் பேசிய காமராஜரின் காங்கிரசு ஆட்சி நிலசீர்திருத்தத்தை எப்படி செயல் படுத்தியது.? நிலப்பிரபுக்கள் பாதிக்காமல் உழுபவனும் உவகை கொள்ளும்படியான இரண்டும் கெட்டான் நிலைக்கு தள்ளியது மட்டுமல்லாமல் இருசாரருக்கம் – நிலப்பிரபுவிற்கும் உழவர்க்ளுக்கும் – மோதல் ஏற்படுகிற வகையில் பிரச்சனைகளை ஒத்திப் போட்டு இருவரையும் மோதவிட்டு ஓட்டு வேட்டையாடுவதிலேதான் அன்றைய காங்கிரஸ் அரசு கவனமாயிருந்தது என்பதெல்லாம் வரலாறு...
அண்ணா அவர்கள் அந்த மாநாட்டில் மேலும் பேசும்போது
“நிலங்களை விவசாயிகளுக்குப் பிரித்துத் தந்தால் மட்டும் போதாது, பிரித்துத் தரப்படுகிற நிலங்களைக் கூட்டுப் பண்ணை முறையில் பயிரிட்டால்தான் எல்லா விவசாயிகளும் நல்ல பலன் காண முடியும், அந்த வகையில், சிறு சிறு நிலப்பரப்பைச் சொந்தமாக உடைய விவசாயிகளைக் கூட்டுப் பண்ணை முறையில் ஒன்று கூட்டி அந்தப் பண்ணை நிர்வாகத்தை வேண்டுமானால் அனுபவம் பெற்றவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சம்பளம் கொடுத்துப் பார்க்கச் சொல்லலாம். அதன்மூலம், இந்த விவசாயத் தொழிலில் அவர் பெற்றிருக்கிற நிபுணத்துவத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நிலங்களை உழவர்களுக்குப் பிரித்துத் தந்துவிடுவதாலேயே வறுமை போயிவிடுமென்பதல்ல, நிலம் பிரித்துத் தரப்படும் மென்பதின் மூலம் உழவர்களுக்கு, தொழிலில் அக்கரை வளரும்.
அந்த அக்கரையுடன், விஞ்ஞான அறிவும் தரப்பட்டால் தொழிலில் நல்ல பலன் கிடைக்கும், அப்போதுதான் வறுமை ஒழியும்!
இவற்றைச் செய்ய, ஒரு நல்ல அக்கறை கொண்ட சர்க்கார் வேண்டும், இங்குள்ள காமராசர் சர்க்காருக்கு, அக்கறை கூட இந்த விஷயத்தில் இருக்கலாம், ஆனால், அதிகாரமில்லாத சர்க்காராக இருக்கிறது.
நேருவின் தலைமையில் உள்ள சர்க்காரோ, அதிகாரமிருந்தாலும், தென்னாட்டவர் மீது அக்கறை இல்லாத சர்க்காராக இருக்கிறது” என்று குறிப்பிட்டுவிட்டு சொல்கிறார்
“நம் பிரச்சனைகளை நாமே கவனித்துக் கொள்ள நமக்கு எல்லா அதிகாரங்களும் உள்ள ஒரு நல்ல அக்கறை கொண்ட சர்க்கார் வேண்டும்” என்பதைத் தெளிவாக விளக்கி, “அந்த அதிகாரம் படைத்த – அக்கறை கொண்ட சர்க்காரை அமைப்பதே தி.மு.கழகத்தின் இலட்சியம்” என்பதையும் தெளிவுபடுத்தினார்.
அப்படி அவர் அப்போது பேசியதின் மெய்பொருள் என்ன என்பது அன்றைய திமுகழகத்தின் கொள்கை என்னவாக இருந்தது என்பது தெரிந்தவர்களுக்கு புரியும். 1 9 6 3 க்கு பிறகு தனிநாடு கோரிக்கை விட்ட பிறகும் அண்ணா குறிப்பிட்டதைப் போல மத்தியில் அக்கறை கொண்ட ஆட்சி அமைப்பதில் திமுகழகம் தன்னாலான மட்டும் பாடுபட்டு தமிழர் நலனுக்கு செயல் ஆற்றியதை யாரும் மறுக்கமுடியாது..
.
(ஆதாரம்: நம்நாடு - 8-9-1954)

No comments: