இன்று கலைஞர் செய்திகளில் திமுகவினர் காவிரி மேலாண்மை அமைக்காத மைய அரசுக்கு
எதிராக நடத்திய விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றிய செய்தித் தொகுப்பில் குளித்தலை
இரயில் நிலையக் காட்சிகளைக் கண்டதும்
திமுகழக வரலாற்றில் குளித்தலையின் பங்கு எத்தகையதாக இருந்தது என்பதெல்லாம் நெஞ்சில் நிழலாடியது.
திராவிட முன்னேறக் கழகம் விவசாயிகளின் மீதான அக்கறை இன்று நேற்று அல்ல துவக்க
காலம் தொட்டே இருந்து அதற்காக போராடிய
வரலாற்றுக்கு சொந்தமானது. அதிலும் தலைவர் கலைஞர் தான் திமுகழகத்தின் முதல்
விவசாயிகளுக்கான போராட்டத்தை நடத்தியவர் என்பதும் சிறப்புக்கு உரியது..
1957ல் நடந்த நங்கவரம் போராட்டம் குளித்தலை வரலாற்றில் முக்கியமானது.விவசாயத்
தொழிலாளர்களைப் பண்ணை ஆண்டைகள் அடிமைகளாக வைத்திருந்த காலம் அது. இதைக்
கேள்விப்பட்ட கலைஞர், விவசாயிகளுக்காகப்
பண்ணையார்களிடம் கூலி உயர்வு கேட்டார். அவர்கள் தர முடியாது என மக்கள் மீது
வன்முறையை ஏவ, தி.மு.க. அந்த
முதலாளிகள் மீது மிளகாய்ப் பொடியைத் தண்ணீரில் கலந்து ஊற்றும் போராட்டத்தைத்
தொடங்கியது. இந்த கலகத்துக்குப் பிறகே விவசாயிகள் பிரச்னை தீர்ந்தது. அவர்களின்
உழைப்புக்கேற்ற கூலி கிடைக்க ஆரம்பித்தது.
கலைஞர் நடத்திய அந்த விவசாயிகள் போராட்டம் குளித்தலையில் அவர் 1957-ல் முதல்
முதல் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனதும்.அந்த
பகுதி நங்கவரம் ஜமீன்தார் விவசாய தொழிலாளர்களை
நியாயமாக நடத்தாததால் அவர் நடத்திய போராட்டம் ஆகும். போராட்டத்தின் விளைவாக ஜமீன்தார் பணிந்தார்.
“நங்கவரம்” பண்ணை விவசாயிகளின் “கையேரு வாரம்-மாட்டேரு வாரம்” என்ற பிரச்சினைக்காகப் பேரவையில் பேசியதுதான் அவரது
முதல் கன்னிப் பேச்சு. அந்த பிரச்சினை குறித்து அவர் வேகமாகப் பேசி அமர்ந்தவுடன், ஒரு துண்டுத் தாளில் பேரவைத் தலைவராக
அப்போதிருந்த மேதகு யு.கிருஷ்ணாராவ் அவர்கள், “Very Good Speech” என்று எழுதி செயலாளர் மூலமாக கலைஞரிடம் கொடுத்தனுப்பினார். அதுதான் சட்டமன்றத்தில் அவருக்குக் கிடைத்த முதல் பாராட்டு என்று கலைஞர் அடிக்கடி
குறிப்பிடுவார். .
அந்த போராட்ட காலத்தில் திரு காமராஜர் முதல்வராக இருந்த அமைச்சரவையில் அங்கம் வகித்த திரு பக்தவத்சலம் அவர்கள்
கல்லணையில் வந்து தங்கி இருந்த போது கலைஞர் அவரை அங்கே சென்று சந்திக்கிறார் .
நிலைமைகளை எடுத்து சொல்லி போராட்டத்தின் நியாயங்களை விளக்கி பண்ணையார்களை
பணியவைக்கும் பணியை செய்தார்.
இது குறித்து அறிஞர் அண்ணா அவர்கள் தன்னுடைய தம்பிக்கு மடலில்
"நாடு பாதி நங்கவரம் பாதி!'' என்றோர் பேச்சு, திருச்சி மாவட்டத்திலே உண்டு. நங்கவரம்
பண்ணையின் அளவினையும் அந்தஸ்தினையும் விளக்கிட எழுந்தது அப் பழமொழி, அந்தப் பண்ணையும் பிறவும் உள்ள குளித்தலை
வட்டத்திலே, இன்று
உழவர்களிடையே ஒரு பெரும் கொந்தளிப்பு. பட்டது போதும் இனிப் பயமில்லை - நமக்குப்
பாதுகாப்பு தரச் சட்டம் வந்துள்ளது என்று அந்தச் சூதுவாதறியாத உழைப்பாளி மக்கள்
உளம் பூரித்து இருந்த வேளையில், "சட்டமா? வார்த்தைகளின்
கோர்வைதானே? இதோ என்
திறமையால், அதனைச் சல்லடைக்
கண்ணாக்கி விடுகிறேன், பாருங்கள்''
- என்று சீறிக்கூறி,
பண்ணையின்
பணப்பெட்டிக்குப் பாதுகாவலராகிவிட்டனர் சிலர். அவர்களால் விளைந்துள்ள வேதனையைத்
தாங்கிக்கொள்ள முடியாமல், உழவர் பெருமக்கள்
கிளர்ச்சியில் ஈடுபடவும் பக்குவமாகிவிட்டனர். வயலோரங்களிலே,
இரும்புத் தொப்பி அணிந்த
போலீசார்! உழவர் வாழ்
பகுதிகளில், உருட்டல்
மிரட்டல் ஏராளம்! இந்த நிலைமையை
எடுத்துக் காட்டி, உழவர்களுக்கு
நீதி வழங்கும்படி, அமைச்சரைக்
கேட்டுக் கொள்ளும் பணியிலே கருணாநிதி ஈடுபட்டது, எனக்குப் பூரிப்பும் பெருமையும் தருவதாக
இருக்கிறது; உனக்கும் உவகை
கொஞ்சமாகவா இருக்கும்!” என்று குறிப்பிடுகிறார்.
அன்றைக்கு அண்ணா அவர்கள் பூரிப்பும் பெருமையும் உவகையும் கொண்ட அதே மனப்பக்குவத்தில்
நம்மை தளபதி ஸ்டாலின் அவர்களும் இன்றைக்கு
நம்மை ஆழ்த்துகிறார். ஒருபக்கம் போராட்ட களம் காண்கிறார். மறுபக்கம் பொறுப்பு முதலமைச்சர்
திரு ஒ.பி.எஸ் அவர்களை சந்திக்கிறார்.
கலைஞரின் வாரிசு கழகத்தின் அடுத்தத் தலைமுறை தமிழகத்தின் எதிர்காலம் தளபதி
அவர்களும் இப்போது இந்த விவசாயிகளின் துயர் துடைக்க போராட்ட களத்தில் முதல்
வரிசையில் அணிவகுத்து செல்வதைக் காணும் போது உள்ளமெல்லாம் உவகையில் மிதக்கிறது.
No comments:
Post a Comment