Wednesday, June 8, 2016

தீர்க்கதரிசி - நோக்கமும் பேரார்வமும் பற்றி

நோக்கமும் பேரார்வமும் பற்றி
அந்த பெண் துறவி மீண்டும் கேட்டார்
நோக்கம் பேரார்வம் பற்றி
சொல்லுங்கள் என்று
அவர் பதில் சொன்னார்:


உங்கள் உயிர்மை பெரும்பாலும் ஒரு போராட்டக்களம்
உங்கள் நோக்கமும் முடிவும் சேர்ந்து கொண்டு
பேரார்வத்தையும் விருப்பத்தையும் எதிர்த்து போரிடுகின்றன

நான் உங்கள் உயிர்மையின் சமாதானி ஆகி
சம்பந்தபட்டவர்களின் பகைமையையும் வன்மையும் மாற்றி
ஒன்றினைத்து மென்மையாக்க முடியும் - ஆனால்
நீங்களும் சமாதானியாகவோ
சம்பந்தப்பட்டவர்களை நேசிப்பவராகவோ
இல்லாதபோது என்னால் எப்படி முடியும்?

உயிர்மையின் கப்பல் பயணத்தில் - உங்கள்
நோக்கம் சுக்கானாகவும்
பேரார்வம் பாய்மரமாகவும் இருக்க வேண்டும்

சுக்கான் பாய்மரம் இரண்டில் ஒன்று உடைந்தாலும்
நடுக்கடலில் தள்ளப்பட்டு தத்தளிக்கவோ
நிலையாகி அங்கேயே நின்றுவிடவோதான்  முடியும்

நோக்கத்திற்கு தடையாய் நிற்கும் படை உங்கள் ஆளுகை மட்டுமே
முயற்சிக்காத பேரார்வம் தீக்குளியலின் நெருப்பு - ஆகையால்
உங்கள் உயிர்மை உங்கள் நோக்கத்தை
பேராரவத்தின் உயரத்திற்கு தூக்கி நிறுத்தட்டும்

நோக்கத்துடன் கூடியப் பேரார்வத்தை
உயிர்மை பாட்டுப்பாடி இயக்கட்டும்

சாம்பலிலிருந்து எழும் சக்கரவாகப் பறவையைப்போல்
பேரார்வம் நாள்தோறும் மறுபிறப்பெடுத்து வாழ்கிறது

முடிவு விருப்பம் என்னும் இரண்டு அன்பான விருந்தினரில்
ஒருவரை மட்டும் உயர்வாக உபசரித்தால்
ஒருவரின் அன்பையும் இருவரின் நம்பிக்கையும்
இழக்க நேரிடும் - ஆதலால்
அக்கறை அதிகம் கொண்டவர் அவ்விதம் செய்யார்

மலைகளிடையே வெண்நிற நெலிங்கமரத்தின் குளிர்நிழலில்
அமர்ந்திருக்கையில், தொலைவிலிருக்கும் வயலின்
பசும்புல்வெளியின் அமைதியையும் சாந்தத்தையும்
அனுபவிக்கையில், உங்கள் இதயம் நிசப்தமாக சொல்லட்டும்
இறைவன் நோக்கத்தில் உறைகிறார்என்று

புயலின் கடுங்காற்று காட்டை அலைக்கும் பொழுது
இடியும் மின்னலும் வானத்தின் வலிமையென அறிவிக்கும் போது
உங்கள் இதயம் பிரமிக்கட்டும்
இறைவன் பேரார்வத்தில் இயங்குகிறார்என்று

இறையின் கோளத்தில் மூச்சுக்காற்றாக
இறையின் காட்டில் ஒரு இலையாக
நீங்கள் இருப்பதால் - நீங்களும் கூட
நோக்கத்தில் உறைய வேண்டும்

பேரார்வத்தில் இயங்க வேண்டும்

No comments:

Post a Comment