Wednesday, January 6, 2016

தமிழரின் இறைக் கொள்கை


வள்ளுவர் இடும்பு (துன்பம்) இல்லாமல் மனக்கவலை அற்று இந்த உலகில் (நிலமிசை) நீடுவாழ வேண்டும் என்கிறார். நீடுவாழ்தல் எனில் புகழோடு வாழ்தல்முதல் குறளில் உலகின் தோற்றமும் அதிலுள்ள எல்லாவற்றிற்கும் அடிப்படையானதும் ஆதிபகவு.    ( பேரண்ட பெருவெடிப்பு - Big Bang ) என்பதை குறிக்கிறார். அதுவே முழுமுதற் காரணியாதலின் முழுமுதற்பொருள்மூலப்பொருள் எனும் இறைவனை ஆதிபகவன் என்கிறார். பிறவி என்பது ஆழி- பெருங்கடல். எப்போது என்ன நேரும் என்று கணிக்க முடியாத சூழல் கொண்டது. அதனைக் கடப்பதற்கு நம் வாழ்க்கைப் பயணத்தில் கடைபிடிக்க வேண்டியதை பொத்தம் பொதுவில் ஒரு முன்னுரை போன்று முதல் அதிகாரத்தில் மற்ற ஒன்பது குறளிலும் குறிப்பிடுகிறார்.

1.        பேரறிஞர் (வாலறிவன்) சொல்லிய அறிவுரைகளை கற்பது மட்டுமல்லாமல் அதன்படி நடத்தல்
2.        அப்படிப்பட்ட அறிஞர்களை மனதில் (மலர்மிசை) ஏற்றி மெய்யுணர்ந்து போற்றிடல்.
3.        வேண்டுதல் வேண்டாமை எனும் வேறுபாடற்று இருத்தல்.
4.        அறியாமை என்னும் இருளில் தள்ளும் இரு வினைகளால் (நல்லவை கெட்டவைகளால்) பாதிக்கப்படாமல் விளங்கல்.
5.        ஐம்புலன்களின் நுகர்வு இச்சையை கட்டுக்குள்வைத்து கபடம் இல்லாமல் வாழ்தல்.
6.        தனக்கு உவமை இல்லாத தனிதன்மையுடன் வாழ்தல். (அதாவது தன்னிலும் சான்றான்மை கொண்டோர் எவரும் இல்லை எனும்படி போட்டிப் மனப்பான்மையுடன் வாழ்தல்)
7.        அறம் செய்து வாழும் அறவோர் வழியை பின்பற்றல்.
8.        எளிதில் அணுகி அய்யங்களை தீர்த்துக்கொள்ள இயலும் பண்பாளரை போற்றல்.
9.        (இத்தகைய குணங்களை உடையவரே தலைமைதாங்கும் தகுதிபெற்ற) இறைவன் எனும் தலைவனை ஏற்றிடல்.
இதுதான் பழந்தமிழரின் இறை கொள்கை.

இறைவன் என்பது முழு முதற்பொருள்- மூலப்பொருள்- தலைமைப் பண்பு கொண்டவன் என்பதாகவே தமிழில் விளங்கப்பெறும். கடவுள் என்னும் சொல்லை வள்ளுவர் பயன் படுத்தவில்லை. ஆனால் இறைவன் தெய்வம் என்னும் இரு சொற்களையும் திருக்குறளில் காணலாம். அப்படியெனில் இறைவன் கடவுள் தெய்வம் என்பதன் பொருள் என்ன?

o    இறைவன்: முழுமுதல்வன் - மூலப்பொருள். மெய்யியலின் முதல் தத்துவம். உளவியல் சார்ந்தது. இறைவனுக்கு பெயரோ வடிவமோ இருக்காது.
o    தெய்வம்: ஒரு குடும்பத்தில் அல்லது ஒரு குழுவில் அல்லது ஒரு பகுதி மக்களிடையே பிறந்து வாழ்ந்து அவர்களுடைய நலனுக்காக பாடுபட்டு மறைந்த ஆண் அல்லது பெண். நன்றிகூறும் நல்நோக்கில் உருவான பண்பாடு.
o    கடவுள்: அவதார மாந்தர். மக்களின் குறை போக்கவும் துயர் துடக்கவும் எப்போதெல்லாம் தேவையோ அப்போது அவதரிப்பது கடவுள். இது ஆரியரின் கற்பனை- நம்பிக்கை. அவர்களுடைய வாழ்வுக்கும் இருப்புக்கும் பயனளிக்கும் வகையில் உருவாக்கிய சில உண்மையும் பொய்மையும் கலந்த பாத்திரப் படைப்புகளே கடவுளர். வள்ளுவர் இக்கருத்தினையும் கதைகளையும் ஏற்றார் இல்லை என்று உறுதியுடன் கூறலாம்.


திருவள்ளுவருக்கு முன்னரும் பின்னரும் இம்மூன்று சொற்களும் பயன் படுத்தப் பட்டமை கவனித்தால் குழப்பம்தான் ஏற்படும் என்பது உண்மை. ஆனாலும் வள்ளுவரின் திருக்குறளை ஊன்றி படித்தால் உண்மை உணரலாம். கடவுள் என்பது தூய தமிழ் சொல்லாயினும் அவர் அதனை தவிர்த்ததை சிந்தித்தால் இவைகள் புரியும். ஒரு காலகட்டத்தில் திருமூலர் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று வலியுறுத்த வேண்டிய நிலைமையும் தமிழகத்தில் இருந்தது

No comments:

Post a Comment