Tuesday, January 19, 2016

கலைஞரும் கவிஞரும்

“எனக்குமோர் காதல் உண்டு இதயத்தின் உள்ளே  தூங்கும்
வனக்கிளி  அவளை  இன்னும்  மறக்கவே முடிய வில்லை!
நினைக்கையில் இனிக்கும்  அந்த நெய்வாசக்  குழலி  இன்று
எனக்கொரு கவிதையானாள் இதுதான் நான் கண்ட இன்பம் !”

கவிஞர் கண்ணதாசன்  அவர்கள்  இப்படி ஒரு அழகான கவிதை  வரிகளை யாரை குறித்து  எழுதினர்  என்பது தெரியுமா?
அவரே தொடர்கிறார் அக்கவிதையில்

“கன்னியின் பெயரைக் கேட்டேன் கருணையின் நிதியம் என்றாள்
மன்னிய உறவைக் கேட்டேன் மந்திரி குமாரி என்றாள் !
பன்னி நான்  கேட்டபோது பராசக்தி வடிவமென்றாள் !
சென்னைதான் ஊரா என்றேன் திருவாரூர்  நகரம் என்றாள்”

இப்போது  கொஞ்சம் புரிந்திருக்கும்
அந்த கவிதை  மேலும் தொடர்கிறது இப்படி

“தந்திரம் அறிவாள், மெல்ல சாகசம் புரிவாள், - மின்னும்
அந்திவான்  மின்னல்போல அடிக்கடி சிரிப்பாள்  - நானும்
பந்தயம் போட்டுப் பார்த்துப் பலமுறை தோற்றேன், - என்ன
மந்திரம் போட்டாளோ என் மனதையே சிறையாய் கொண்டாள்”

.தலைவர் கலைஞர் அவர்களை  பெண்ணாக பாவித்து தன்  காதலியாக உருவகித்து  கவிஞர் கண்ணதாசன் எழுதிய கவிதை இது.

ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? என்ன இது  கவிஞர் கலைஞரை வறுத்தெடுத்து ‘வனவாசம்’ புத்தகத்தில் எழுதியதுதானே தெரியும். இதை எப்போது எழுதினர் என்று கேட்கிறீர்களா?

வனவாசம் எழுதியதற்கு பிறகு மனமாற்றம் அடைந்த பிறகு எழுதியது. கவியரங்க மேடையில் அவரே பாடியது.

கலைஞரைப் பற்றி  வனவாசம்  புத்தகத்தில் எழுதியதை படித்துவிட்டு அல்லது யாரோ சொல்வதைக் கேட்டுவிட்டு வனவாசம் வனவாசம் என்று வரட்டுத் தவளைகளாக உளறுபவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.  கடைசி காலத்தில் கவிஞர் அப்படி எழுதியதற்கு பிராயச்சித்தமாகத்தான் இந்த கவிதையை எழுதினார் என்பதையும் பலவிதத்திலும் கலைஞரை புகழ்ந்தும் பாராட்டியும் இருக்கிறார் என்பதும் அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் .

 1971 ல் ‘கவியரங்கில் கலைஞர்’ என்னும் நூலை கவிஞர்தான் வெளியிட்டார். அந்த விழாமேடையில் கலைஞர் கிடையாது. அப்போது கவிஞர் பேசியது

”நல்லவேளை அவர் இப்போது இங்கே இல்லை. இருந்தால் எனது எல்லை குறுகியதாக இருக்கும். அவரைப்  பாராட்ட வேண்டியது எனது கடமைமட்டுமல்ல. அது என் உரிமையுமாகும். முன்னோர்கள் சொல்வார்கள் ‘நேசரைக்  காணாவிடத்து நெஞ்சாரப் புகழ்தல் வேண்டும்’ என்று. அப்படி இந்த சபையில் பழைய மரபுபடி புகழ்கிறேன்”

கவிஞருக்கும் கலைஞருக்கும் அப்படி என்ன நேசம்.?

1949 முதல் இருவருக்கும் நட்பு. திமுகழகத்தில் கவிஞர் சேர்ந்ததே கலைஞரால் தான். முதல்முதல் கவிஞர் என்ற பட்டப் பெயருடன் பொது மேடையில் ஏற்றி பேச வைத்தவரும் கலைஞர் தான்.
அந்த நிகழ்ச்சியை இருவருமே பதிவு செய்து இருக்கிறார்கள்.

மந்திரிகுமாரி படத்திற்கு கதைவாசனம்  எழுத சேலம் மாடர்ன் தியேட்டர்சில் கலைஞர் பணி செய்த காலத்தில் அங்கு வந்த கண்ணதாசனுடன் பழக்கம் ஏற்பட்டு நட்பாக இருந்த சமயம். ஒருமுறை சேலத்திலிருந்து கோவை சென்று அங்கிருந்து பொள்ளாச்சிக்கு ஒரு பொதுக் கூட்டத்தில் உரை நிகழ்த்த கலைஞர் போய்க்கொண்டிருக்கும் போது அவரை பார்த்த கண்ணதாசன் தானும் பொள்ளாச்சிக்கு வருவதாக சொல்லி கலைஞருடன் அந்த கூட்டத்திற்கு போய் இருக்கிறார்.

அங்கு போனதும் தானும் அந்த கூட்டத்தில் பேசவேண்டும் என்று சொல்ல கலைஞர் ‘ நெற்றியிலே  விபூதிப்பட்டை குங்கமப் போட்டு எல்லாம் வைத்துக் கொண்டு எங்கள் கட்சி கூட்டத்தில் பேசுவதா? ‘ என்று சொன்னதும் உடனே கண்ணதாசன் விபூதி குங்குமத்தை அவசரமாக அழித்துவிட்டு ‘ இப்போது பேசட்டுமா ‘ என்று கேட்டு அனுமதி பெற்று அந்த கூட்டத்தில் முதல் முதலாக பேசி இருக்கிறார்.

அதுவும் எப்படி ‘ வட்டிக்கு வட்டி வாங்கும் செட்டிமார் நாட்டில் பிறந்தவன் நான்’ என்ற முன்னுரையுடன் சுயமரியாதை நாத்திகக் கருத்துகளை அற்புதமாக பேசி இருக்கிறார். அதற்கு வட்டியும் முதலுமாக கலைஞர் இப்படி சொந்த ஊரைப் பற்றி குறையாக பேசக்கூடாது என்றும் அறிவுரைத்து இருக்கிறார் .

அந்த கூட்டத்தில்தான் கவிஞர் கண்ணதாசன் என்று கலைஞர் அவரை அறிமுகம் செய்தார்.

இந்த நிகழ்ச்சி பற்றி கலைஞர் ஒருமுறை ‘எப்படி அவசரமாக விபூதி குங்குமத்தை அழித்துவிட்டு திராவிட இயக்கத்தில் சேர்ந்தாரோ  அப்படிதான் பல விஷயங்களில் அவசர முடிவெடுத்து விடும் சுபாவம் உள்ளவர் கண்ணதாசன்’ என்று குறிப்பிட்டார்.

கண்ணதாசன் திருமணத்திற்கு கலைஞரை அழைத்து இருக்கிறார். கலைஞரும்  அரங்கண்ணல் அவர்களும் அந்த திருமணத்தில் கலந்துகொள்ள காரைக்குடி சென்றபோது கண்ணதாசன் சகோதரர்கள் உறவினர்கள் எல்லாம் இவர்களை கண்டு  இவர்கள் ஏன் வந்தார்கள் என்ற தோரணையில் பார்த்து இருக்கிறார்கள். அந்த திருமணம் சீர்திருத்த திருமணம் அல்ல.

தாலி கட்டிய உடனே கண்ணதாசன் அவர்கள் ‘என் நண்பர்கள் கருணாநிதியும் அரங்கண்ணலும் மணவாழ்த்து கூறுவார்கள்’ என்று சொல்லி அந்த மணமேடையில் பேச வைத்து இருக்கிறார்.

கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அண்ணா காலத்திலேயே திமுகழகத்தை விட்டு திரு சம்பத் அவர்களுடன் விலகி பிற்பாடு காங்கிரசில் இணைந்தவர். அந்த காலகட்டத்தில் வனவாசம் புத்தகம் எழுதி அண்ணா கலைஞர் எல்லோரையும் வசை பாடியவர். 1968 ல் அண்ணாவின் அமைச்சரவையில் கலைஞர் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது கலைஞர் மீது அவதூறு ஒன்றை சொல்லப்போக கலைஞர் வழக்கு தொடுக்க அந்த வழக்கில் கவிஞருக்கு 3௦௦ ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவமும் உண்டு.

அவர் தலைவராக ஏற்றுக் கொண்ட எல்லோரையும் ஏதோ ஒரு சமயத்தில் தரக்குறைவாகவே பேசியிருப்பார்.  அண்ணா, கலைஞர் , எம்ஜிஆர் மட்டும் அல்ல பண்டிதர் நேரு, ராஜாஜி , இந்திராகாந்தி, புரட்சிக்கவிஞர், மபொசி , என்ற பட்டியல் நீண்டு அதில் காமராஜர் அவர்களும் இடம் பெற்றார்  என்பது எத்தனைப் பேருக்கு தெரியும்?

கலைஞருக்கும் கவிஞருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள்தான் பெரிதாக பேசப்பட்டு பரப்பப்பட்டு வருகின்றன.1979 ல் எழுதிய ‘எம்ஜிஆரின் உள்ளும் புறமும்’ என்ற நூலையோ அவர் இந்திரா காங்கிரசில் இருந்தபோது காமராஜர் உயிருடன் இருந்த காலத்திலேயே காமராஜரை பற்றி பேசியதையோ எழுதியதையோ யாரும் நினைவு கொள்வதில்லை.

கலைஞர் “கண்ணதாசன் ஒருவரை உயர்த்துவதென்றால் ஆறடி – ஏழடி ஏன் அறுபது அடி கூட உயர்த்துவார். அங்கிருந்து கீழே போடும் போதுதான் வலி தாங்காது . அப்படி வலி தாங்கிக் கொண்டவர்களில் நான் ஒருவன் “ என்று ஒருமுறை சொன்னார்.

எந்த கவிஞர் வனவாசத்தில் வசை பாடினாரோ அவர்தான் 1971 ல் கலைஞர் பிறந்தநாளை முன்னின்று அவரே நடத்தினார். இந்திரா காங்கிரஸ் தலைவர் திரு சி.சுப்பிரமணியம் அவர்களை அந்த விழாவிற்கு அழைத்து கலைஞரை பாராட்ட செய்தார். அந்த விழாவிற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. கலைஞரின் அந்த வருட பிறந்தநாள் திட்டமான பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டத்திற்கு அந்த விழாவில் வசூலான தொகையில் செலவு போக மீதியை அளித்தார்.   

அதே போன்று 1974 ல் கலைஞரின் பொன்விழா பிறந்தநாளின்  போது தூங்காமை கல்வி துணிவுடைமை என்னும் வள்ளுவரின் இலக்கணத்திற்கு தகுதியுள்ள தலைவர் கலைஞர் என்று புகழாரம் சூட்டினார். கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கவியரங்கத்திற்கு  தலைமை ஏற்று நடத்தினார்.  

1977 ஆம் ஆண்டு ஜுலை 23  ம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மறைந்த பிறகு கலைஞர் ஆட்சி நெருக்கடி காலத்தில் கலைக்கப்பட்ட பிறகு ஜனதா ஆட்சி மத்தியிலும் எம்ஜிஆர் ஆட்சி மாநிலத்திலும்  அமைந்த காலகட்டத்தில்  கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளை பிரமாண்டமாக நடத்துகிறார். திமுக, ஜனதா, காங்கிரஸ் கட்சியினர் அனைவரையும் ஒன்றிணைத்து அந்த விழாவை நடத்துகிறார். அதில் சிறப்பு விருந்தினராக கலைஞரை அழைத்து சிறப்பு செய்கிறார். ‘பெரியார் ராஜாஜி காமராஜர் அண்ணா மூவரையும் இழந்துவிட்ட தமிழக அரசியலில் இன்று உன்னத தலைவராக கலைஞர் ஒருவர்தான் மிஞ்சி இருக்கிறார் என்பதால் அவரை இந்த விழாவிற்கு அழைத்தேன்’ என்று முழக்கமிட்டார்.  ‘அவர்களுக்கு அடுத்து அந்த  பாரம்பரியத்தின் வழித் தோன்றலாக கலைஞர் திகழ்கிறார்’ என்று அந்த விழாவிலே பேசினார்.

அதுமட்டுமல்ல அந்த விழாவில் கவிஞர் சொல்லிய இன்னொரு தகவல்தான் மிக முக்கியமானது.
“காமராஜரின் கடைசி காலத்தில் ஆறு ஏழு மாதங்கள் அரசியல் பற்றி தீவிரமாக எண்ணம் கொண்டிருந்தேன். இரண்டு காங்கிரசும் இணைய வேண்டும் என்று காமராஜரிடம் சொல்லி வந்தேன். அவர் சொன்னார் ‘இணைப்பு என்கிறாய் சரி இணைந்த பிறகு தேர்தல் வந்தால் திமுகழகம் பலமாக இருக்கிறது நமது பலம் போறாது அதனால் எம்ஜிஆரிடம் போய் கூட்டு வைத்துக் கொள் என்று டெல்லியிலிருந்து சொன்னால் நான் சத்தியா ஸ்டுடியோ வாசலில்போய் நிற்க வேண்டுமா’ என்று கேட்டார். அவர் சொன்னது போலதான் கூட்டு ஏற்பட்டது. அப்போது  தலைவர் காமராஜர் சொன்னார் அப்படி கூட்டு என்றால் அவனோடு என்ன இவனோடு வைத்துக் கொள்ளலாமே என்றார் . தலைவர் அவர்கள்  கலைஞரைதான் அப்படி சொன்னார். வயதில் பெரியவர்கள் அப்படி சொல்வதில் தவறில்லை. இவன் அரசியல்வாதி அவன் யார்? என்றார். அந்த அளவுக்கு கலைஞரும் காமராஜரும் ஒருவருக்கு ஒருவர் பாசத்தோடு இருந்தார்கள். இவருக்கு அவர் மீது பாசம். அவருக்கு இவர் மீது பாசம். இரண்டுபேரும் சண்டைக் காதலராக இருந்தார்கள். காமராஜர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் திமுக அரசு டிஸ்மிஸ் ஆகியிருக்காது. நிலைமைகளும் வேறுமாதிரி ஆகியிருக்கும்.” .

கவிஞரின் இந்த உரை இன்றைக்கு எவ்வளவு பேருக்குத் தெரியும்? கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட உண்மை சம்பவங்கள் பலவற்றில் இதை முக்கியமாக யாரும் மறக்கக் கூடாது. இப்படிப்பட்ட உண்மை சம்பவங்களின் உள்ளே உறையும் சிந்தனை ஓட்டங்கள்தான் தமிழகத்தின் நலனுக்கும் எதிர்காலத்திற்கும் நல்லதாக அமையும்.

1981 கவிஞர் அமெரிக்க பயணத்தின் போது சிக்காகோவில் உடல்நலம் குன்றி அங்கேயே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அப்போது எம்ஜிஆர் முதல்வர். கவிஞரின் வசை என்னும் கசையடிகளைத் தாங்க முடியாத எம்ஜிஆர் அவரை அரசவைக் கவிஞர் என்ற பசையால் அவர் வாயை ஒட்டியிருந்த சமயம். கலைஞர் எதிர் கட்சித் தலைவர். கவிஞர் கண்ணதாசன் அவர்களுடைய மருத்துவசெலவு முழுதும் அரசே ஏற்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். அமைச்சர் அரங்கநாயகம் அவர்கள் அரசவைக் கவிஞர் என்ற முறையில் 5௦௦௦௦ ரூபாய் அலாட் ஆகி இருக்கிறது என்று சொல்கிறார். கலைஞர்  ‘அது தெரிந்துதான் கேட்கிறேன் ஐம்பதாயிரம்  போதாது .இலட்சக்கணக்கில் செலவாகிறதாம். முழு செலவையும் அரசு ஏற்க வேண்டும் “ என்கிறார். அரசு அவர் கோரிக்கையை பரிசீலிப்பதாக அறிவிக்கிறது.

கவிஞர் 6௦ வயது முடியும் முன்பே 1981 அக்டோபர் மாதம் மறைந்து விட்டார். 1988 ல்அவருடைய 6௦ வயது நிறைவில் குடும்பத்தினர் மணிவிழா என்ற பெயரில் கொண்டாட இருந்தனர். கலைஞரை அழைத்தனர். கலைஞர் ‘மணிவிழா என்ற பெயரில் வேண்டாம் 61 வது பிறந்தநாள் விழா என்று கொண்டாடுவதுதான் சரி , மணிவிழா என்றால் அவர் உயிருடன் இருக்கும் போது கொண்டாடி இருக்கவேண்டியது’ என்று  பொறுப்புள்ள குடும்ப உறுப்பினரைப் போல் மரபுகாக்கும் மண்ணின் மன்னனாக இருந்து அறிவுரை சொல்லி அதன்படியே அந்த விழா  சிறப்பாக நடந்தது.

அந்த விழாவில் கலைஞர் பேசும்போது  இறுதியாக “என் இனிய நண்பருக்கு அருமை நண்பருக்கு நினைவுச்சின்னம் வேண்டும் என்று கேட்டார்கள். காலம் வரும். கவியரசருக்கு நினைவுச்சின்னம் எழும் என்று கூறி விடை பெறுகிறேன்” என்று சொல்லி முடித்தார் .அந்த விழாவில் கலைஞரின் உரை நட்புக்கு எழுப்பிய பொற்சிலையாய் பளிச்சிட்டது  

எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் கவிஞர் மறைந்து ஒன்பது ஆண்டுகள் கழித்து கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் நினைவு மண்டபம் எழுப்பப்பட்டது.
கவிஞரின் 61 வது பிறந்தநாள் விழாவில் எதிர் கட்சியில் இருந்தபோது கொடுத்த வாக்குறுதி  199௦ ல் ஜனவரி 3௦ தேதியில்  காரைக்குடி சட்டமன்ற உறுப்பினராக இயக்குனர் இராம நாராயணன் இருந்தபோது கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு மிகப் பிரம்மாண்டமான நினைவுசின்னம் காரைக்குடி- நெல்லிக்காவூரணியில்  அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டது. . அந்த விழாவில் அப்போது முதல்வராக இருந்த கலைஞரின் உரை காலத்தால் அழிக்க முடியாத  காவியம்.

கெடுவாய்ப்பாக கலைஞர் அதை திறக்க முடியாமல் போய்விட்டது. 1991 ல் கலைஞர் ஆட்சி கலைக்கப் பட்டபோது நினைவுசின்னம் முடியும் தருவாயில் இருந்தது. கவர்னர் ஆட்சியில் திறக்கப் பார்த்தார்கள். திட்டப்படி முழுதுமாகக் கட்டிமுடிக்கப்பட்ட பிறகுதான் திறக்க வேண்டும் என்று எதிர்ப்பு கிளம்பியதால் விழா ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டது.  பிறகு ஜெயா ஆட்சியில் திறக்கப்பட்டு நாங்கள்தான் கட்டினோம் என்று அதிமுக சொல்லிக் கொண்டது  போகட்டும் வரலாற்று உண்மைகள் மறைக்கப்படலாம். ஆனால் உண்மை என்பது என்றுமே உண்மைதான்.


கவிஞரின் மறைவுக்கு கலைஞர் எழுதிய கவிதாஞ்சலியைப் படித்தால் கரையாத நெஞ்சும் கரையும். கொள்கைகள் முரண்பட்டாலும் நட்பின் மேன்மை உணர்ந்த உன்னதத் தலைவனின் உச்சம் தெரியும்.  

என் இனிய நண்பா
இளவேனிற் கவிதைகளால்
இதய சுகம் தந்தவனே
உன் இதயத் துடிப்பை
ஏன் நிறுத்திக் கொண்டாய்
தென்றலாக வீசியவன் நீ
என் நெஞ்சில்
தீயாக சுட்டவனும் நீ
அப்போதும் அன்றிலாக
நம் நட்பு திகழ்ந்ததே அன்றி
அணைந்த தீபமாக
ஆனதே இல்லை நண்பா
கண்ணதாசா என்
எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா
கவிதை மலர் தோட்டம் நீ  
உன்னை காலம் எனும் பூகம்பம்
தகர்த்து தரை மட்டம் ஆக்கிவிட்டதே
கைநீட்டி கொஞ்சுவோர் பக்கமெல்லாம்
கரம்நீட்டித் தாவும் குழந்தை நீ
கல்லறைப் பெட்டி மடியினிலும்
அப்படிதான் தாவிவிட்டாயோ ?
அமைதிப்பால் அருந்தி தூங்கி விட
இயற்கை இசைபாடி களித்த குயில் உன்னை
மயக்க மருந்திட்டுப் பிரித்தார் உன்னை
தாக்குதல்கள் எத்தனைதான்
நீ தொடுத்தாலும்
தாங்கிக் கொண்ட என் நெஞ்சே உன் அன்னை
திட்டுவதும் தமிழில் நீ திட்டியதால்
சுவைப் பிட்டு என ஏற்றுக் கொண்ட என்னை
தித்திக்கும் கனித் தமிழா
பிரிவு மத்தியிலே ஏன் விட்டு சென்றாய்
அடடா அந்த இளமை கழனியில்
அன்பெனும் நாற்று நட்டோம்
ஆயிரம் காலத்துப் பயிர் நம் தோழமை என
ஆயிரம் கோடி கனவுகள் கண்டோம்
அறுவடைக்கு யாரோ வந்தார்
உன்னைமட்டும் அறுத்து  சென்றார்  

நிலையில்லா மனம் உனக்கு ஆனால்
நிலைபெற்ற  புகழ் உனக்கு
இந்த அதிசயத்தை விளைவிக்க உன்பால்
இனிய தமிழன்னை துணை நின்றாள்

என் நண்பா இனிய தோழா 
எத்தனையோ தாலாட்டு பாடிய உன்னை
இயற்கை தாய் தாலாட்டி தூங்க வைத்தாள்
எத்தனையோ பாராட்டு பெற்ற உனக்கு
இயற்கை தாய் சீராட்டுத்தான் இனிக்கின்றதா
எனை மறந்தாய் எமை மறந்தாய்
உன்னை மறக்க முடியாமல்
உள்ளமெல்லாம் நிறைந்தாய்  

Friday, January 15, 2016

தீர்கதரிசி - வாங்குவது விற்பது பற்றி


ஒரு வணிகர்
வாங்குவது விற்பது பற்றி
கேட்டபோது அவர் சொன்னார்:

உலகம் உங்களுக்கு  
பழங்களை விளைவித்து பரிசளிக்கிறது.
அவை தேவையில்லாமல் இருந்தாலும்
அவற்றை எப்படி கைப்பற்றுவது என்பது
உங்களுக்குத் தெரியும்.

பூமியின் அளவற்ற பரிசிலை பண்டமாற்று செய்து
திருப்தி அடைய வேண்டும்
இருந்தாலும் அந்த பரிமாற்றம்
அன்பிலும் நீதியிலும் தவறக் கூடாது
இல்லையென்றால் அது சிலரை பேராசைக்காரராகவும்
மற்றவரை பசித்தவராகவும் ஆக்குவதற்கு வழிவகுக்கும்.

கடலிலும் நிலத்திலும் திராட்சைத் தோட்டத்திலும் உழைத்தவர்கள் 
நெசவாளிகள் குயவர்கள் மலையகத் தோட்டத் தொழிலாளிகள்
எல்லோரும் சந்தைவெளியில் சந்தித்து;  
மதிப்புகளை மதிப்புகளுடன் மதிப்பீடு செய்ய
உலகின் உன்னத ஆவியை சன்னதம் அழைத்து
தராசுத் தட்டுகளை தூய்மைபடுத்தி நேர்ந்து விடுகிறார்கள்.

.உங்களின் கொடுக்கல் வாங்கல் வணிகத்தில்
வெறுங்கையுடன் வந்து உங்கள் உழைப்பை
வார்த்தைகளால் வாங்க கருதியவர் பற்றி
வருத்தம் அடைய வேண்டாம்.
அப்படிப்பட்டவர்களிடம் தவறாமல் சொல்லுங்கள்:

எங்களுக்கு இருப்பதைப் போலவே
உங்களுக்கும் நிலமும் கடலும்
எல்லையற்றதாகவே இருக்கிறது - ஆதலால்
எங்களோடு வயலுக்கு வாருங்கள்,
எம் உடன்பிறப்புகளுடன்
கடலுக்குச் செல்லுங்கள், வலை வீசுங்கள்என்று

மேலும்
பாடல் ஆடல் குழலிசை கலைஞர்கள்  
சந்தைக்கு கொண்டுவரும்  பரிசில்கள்
கனவுகளின் கவின்கலையாக இருந்தாலும்
உங்கள் உயிர்மைக்கு
உடையாகவும் உணவாகவும் இருக்கும்
அவைகளை நீங்கள் வாங்குவதால்  
அவர்களும் தங்களுக்கு வேண்டிய
பழங்களையும் படையல் பொருள்களையும் வாங்க இயலும்

.உங்களில் சாமானியனும் மனநிறைவு அடையும் வரை
காற்றுவெளியில் இந்த பூமியின் உயிர்மை
அமைதியுடன் உறங்காது என்பதால்
சந்தையை விட்டு வெளியேறும் முன்பு,

யாரும் வெறும் கைகளுடன் திரும்பாமல் பாருங்கள்